Last Updated : 19 Jul, 2015 11:49 AM

 

Published : 19 Jul 2015 11:49 AM
Last Updated : 19 Jul 2015 11:49 AM

கர்நாடகத்தில் தொடரும் கொடுமை: தலித் மக்கள் குளத்தில் தண்ணீர் எடுக்க, கோயிலில் நுழைய தடை - நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம்

கர்நாடகத்தில் ஹாசன் மாவட்டத்தில் உள்ள குளத்தில் தலித் மக்கள் தண்ணீர் எடுக்கவும் கோயிலுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்னா வட்டத்தில் குருவங்கா என்னும் குக்கிராமம் உள்ளது. இங்கு 20 தலித் குடும்பங்களும் சுமார் 200 பிற வகுப்பை சேர்ந்த குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றன. குருவங்கா கிராமத்தின் நடுவில் ஊரின் பொது குளம் உள்ளது. இந்த குளத்தில் மற்ற சாதியினரும் அவர்களது ஆடு, மாடுகளும் மட்டுமே இறங்கி நீர் அருந்த வேண்டும்.

தலித் மக்கள் குளத்துக்குள் இறங்கி தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊர் கட்டுப் பாடு என்பதால் இந்த தீண்டாமை முறை காலங்காலமாக கடைப்பிடிக் கப்படுகிறது. தலித் மக்களுக்கு தண்ணீர் தேவைப்பட்டால் குளத்தின் அருகில் பானையை வைத்துவிட்டு வரிசையாக அமர வேண்டும். மற்ற சாதியை சேர்ந்த பெண்கள் தண்ணீர் எடுக்கும்போது தலித் மக்களின் பானைகளுக்கும் தண்ணீர் ஊற்றுவார்கள். மற்ற சாதியினர் வராவிட்டால், எத்தனை மணி நேரம் ஆனாலும் தண்ணீர் எடுக்காமல் காத்திருக்க வேண்டும்.

இதை மீறி நேரடியாக தலித் மக்கள் குளத்தில் இறங்கினாலோ, தண்ணீரை தொட்டாலோ, தீட்டு செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்படுவார்கள். அதன் பிறகு ஊர் பெரியவர்கள் கூடி, சம்பந்தப்பட்டவரை ஆறு மாதங்களுக்கு ஊரை விட்டு ஒதுக்கிவைத்து விடுவார்கள்.

இந்த காலகட்டத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டவர் களுடன் அவர்களது உறவினர்கள் கூட உறவாட கூடாது என்பது போன்ற க‌டும் தண்டனை வழங்குவது வழக்கமாக உள்ளது.

இதே போல குருவங்கா கிராமத்தில் உள்ள மஹாதேவரைய்யா கோயிலுக்குள் நுழைய தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் தலித் மக்கள் கோயிலுக்கு வெளியே உள்ள சாலையில் நின்றவாறு கடவுளை வழிபட்டு வருகின்றனர்.

மேலும் திருவிழா காலங்களில் நடத்தப்படும் தேர் பவனி, மற்ற சாதியினர் வசிக்கும் தெருக்களில் மட்டுமே செல்கிறது. தலித் மக்கள் வசிக்கும் காலனிக்கு செல்வதில்லை. இதனால் தலித் மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனைக் கண்டித்து தலித் அமைப்பினரும் மனித உரிமை ஆர்வலர்களும் நேற்று குருவங்கா கிராமத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குளத்தில் தண்ணீர் எடுக்கவும் கோயிலுக்குள் நுழையவும் தலித் மக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். தலித் மக்கள் மீது திணிக்கப்படும் தீண்டாமை கொடுமையை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

இது தொடர்பாக மனித உரிமை செயற்பாட்டாளர் மஞ்சு தண்டோரா, 'தி இந்து'விடம் கூறியதாவது:

21-ம் நூற்றாண்டிலும் குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது, கோயிலுக்குள் நுழையக் கூடாது என தலித் மக்களுக்கு எதிராக தீண்டாமை கடைபிடிப்பதை சகித்துக் கொள்ள முடியாது.

இந்தப் பிரச்சினையால் அவ்வப்போது தலித் மக்களுக்கு ஊர் பஞ்சாயத்து கடுமையான தண்டனை வழங்கி வருகிறது. இதை தடுக்கக் கோரி மனித உரிமை ஆர்வலர்களும், தலித் அமைப்பினரும் போராட்டம் நடத்தினாலும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக இருக்கிறார்.

இங்குள்ள தலித் மக்களில் பெரும்பாலானோர் மற்ற சாதியினருக்கு சொந்தமான தோட்டங்களில் கூலி வேலை செய்கின்றனர். குறைந்த ஊதியத்துக்கு அதிக நேரம் உழைக்கிறார்கள். தலித் மக்களை அனுமதிக்காத மற்ற சாதியினர் ஆடு, மாடு, நாய்களை குளத்துக்குள் அனுமதிப்பது மனித தன்மையற்ற செயல். ஊர் கட்டுப்பாடு, பழக்க வழக்கம், சம்பிரதாயம் என்ற பேரில் கடைபிடிக்கப்படும் தீண்டாமை கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இல்லாவிடில் குருவங்கா கிராமத்தில் மட்டுமில்லாமல், ஹாசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிராகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் 'காவிரி' இல்லத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்வோம்''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x