

லலித் மோடி-சுஷ்மா ஸ்வராஜ் விவகாரத்தில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. அதாவது லலித் மோடி குடும்பத்தினர் நடத்திய நிறுவனத்தின் இயக்குநர் பதவி சுஷ்மா கணவருக்கு வழங்கப்பட்டதாக புதன்கிழமை புதிய சர்ச்சைக் கிளம்பியுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்வராஜ் கவுஷலுக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
லலித் மோடி குடும்பத்தினருக்குச் சொந்தமான ஒருங்கிணைந்த ரசாயன நிறுவனமான இண்டோஃபில் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் லலித் மோடி இடத்தில் இயக்குநர் பதவியை சுஷ்மா ஸ்வராஜ் கணவர் ஸ்வராஜ் கவுஷலுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.
அதாவது சுஷ்மா ஸ்வராஜ், லலித் மோடிக்கு பயண ஆவணங்கள் விவகாரத்தில் உதவி புரிந்ததற்கு சில மாதங்களுக்குப் பிறகு இந்த நிறுவனப்பதவி சுஷ்மா கணவருக்கு வழங்கப்பட்டதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்துள்ளன.
ஆனால், இந்த பதவி வழங்கீட்டை நிறுவன வாரியம் பரிசீலனை செய்வதற்கு முன்பாகவே லலித் மோடி திரும்பப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
“இந்த கோரிக்கையை நிறுவன போர்டு ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே தற்போதைய நிலை” என்று லலித் மோடியின் தந்தை கே.கே.மோடி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, “லலித் மோடி அவருக்கு பதவி வழங்க முன்மொழிவை மட்டுமே மேற்கொண்டார், அப்போது லலித் போர்டில் இல்லை, எனவே எங்கு முரண்பட்ட இரட்டை லாப நோக்கு எழுகிறது? சட்டத்தின் படியே இயக்குநர்கள் நியமனம் செய்யமுடியும்” என்றார்.
ஸ்வராஜ் கவுஷல், தனக்கு இயக்குநர் பதவி வழங்க முன்வரப்பட்டது என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் தான் லலித் மோடிக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக இருந்து வருவதாகவும், இயக்குநர் பதவிக்கு தான் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் இதனால் திரும்பப் பெறப்பட்டது என்றும் அவர் கூறினார்.
இயக்குநராகவோ, வழக்கறிஞராகவோ, சட்ட ஆலோசகராகவோ ஒருவரை நியமிப்பது மிகவும் வழக்கமான விஷயம் இதில் சர்ச்சைக்கு என்ன இருக்கிறது என்று பாஜக-வின் நளின் கோலி கேட்டுள்ளார்.