

‘‘காந்தகாருக்கு விமானம் கடத்தப்பட்ட போது, பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற பயத்தில் யாரும் முடிவெடுக்க தயாராக இல்லை’’ என்று `ரா’ உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் தவ்லத் கூறியுள்ளார்.
கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி இந்தியன் ஏர்லைன்ஸ் ஐசி 814 விமானத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்தினர். ஆப்கானிஸ்தானின் காந்தகார் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினர். பின்னர் 3 முக்கிய தீவிரவாதிகளை விடுவித்து விமானத்தை மீட்டு வந்தனர். விமானம் கடத்தப்பட்ட போது, அவசர கால மேலாண்மை குழு உறுப்பினராக இருந்தவர் ஏ.எஸ்.தவ்லத். இவர் `ரா’ உளவு பிரிவு தலைவராகவும் அப்போதைய பிரதமர் வாஜ்பாயியின் சிறப்பு ஆலோசகராகவும் இருந்தார். இவர் நேற்றுமுன்தினம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்ட போது, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தரையிறக்கப்பட்டது. அங்கிருந்து விமானம் செல்வதை தடுக்க யாரும் அப்போது எந்த முடிவும் எடுக்க தயங்கினர். ஏனெனில், விமானப் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சினர். அதனால், பஞ்சாப் போலீஸாருக்கு யாரும் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. விமானத்தை மீட்கும் ஆபரேஷனை கோட்டைவிட்டு விட்டோம்.
காந்தகாருக்கு விமானத்தை கடத்திய தீவிரவாதிகள், 105 கூட்டாளிகளை (தீவிரவாதிகளை) விடுவித்தால்தான் விமான பயணிகளை விடுவிப்போம் என்று நிபந்தனை விதித்தனர். பேச்சுவார்த்தையின் போது 35 தீவிரவாதிகளை விடுவிக்க கோரினர். அதன்பின் 15 தீவிரவாதிகளின் பெயர்களை கூறினர். கடைசியில் 3 தீவிரவாதிகளை விடுவிக்க முடிவானது. அதன்பின் அவர்கள் குறிப்பிட்ட 3 தீவிரவாதிகளை தனி விமானத்தில் அழைத்து சென்று காந்தகாரில் ஒப்படைத்தோம். அதன்பிறகுதான் விமானமும் அதில் இருந்த பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட 3 தீவிரவாதிகளில் 2 பேர் காஷ்மீர் சிறையில் இருந்தனர். அவர்களை விடுவிக்க மத்திய அரசு முடிவெடுத்தபோது, அப்போதைய முதல்வர் பரூக் அப்துல்லா கடும் கோபம் அடைந்தார். பதவியை ராஜினாமா செய்வதாக கூறி ஆளுநர் கிரிஷ் சந்தர் சக்சேனாவை சந்தித்தார். ஆனால், சூழ்நிலையை ஆளுநர் எடுத்துரைத்து பரூக் அப்துல்லாவை சமாதானப்படுத்தினார்.
வாஜ்பாய் வருத்தம்
பிரதமர் வாஜ்பாயை நான் கடைசியாக சந்தித்து பேசியபோது, கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் தனது அரசு சில தவறுகளை செய்து விட்டதாக அவர் வருந்தினார். குஜராத் கலவரத்தின் கவலை வாஜ்பாய் முகத்தில் வெளிப்படையாக தெரிந்தது.
இவ்வாறு தவ்லத் கூறியுள்ளார்.
ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்க தலைவர் மவுலானா மசூத் அசார் மற்றும் முஷ்டாக் அகமது ஜர்கார், அகமது ஒமர் சயீத் ஷேக் ஆகிய 3 தீவிரவாதிகளை மத்திய அரசு விடுவித்து இந்தியன் ஏர்லைன் விமான பயணிகளை மீட்டது குறிப்பிடத்தக்கது.
தவ்லத் அளித்துள்ள பேட்டி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் குமார் கூறியதாவது: “விமான கடத்தல் விஷயத்தில் சில உண்மைகள் இப்போது வெளியாகி உள்ளன. அவசர கால மேலாண்மை துறை பாஜக அரசில் படுதோல்வி அடைந்தது தவ்லத் பேட்டி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமிர்தசரஸில் இருந்து விமானம் வெளியில் செல்ல விட்டுவிட்டதால்தான், 3 தீவிரவாதிகளை விடுவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
எனினும், அப்போதைய சூழ்நிலையில் வாஜ்பாய் அரசு எடுத்த முடிவு சரியானதுதான். அரசின் முதல் கவலையே பயணிகளின் பாதுகாப்பாகதான் இருந்தது. 3 தீவிரவாதிகளை விடுவித்து பயணிகளை காப்பாற்ற எல்லோரும் ஒருமனதாகதான் முடிவெடுத்துள்ளனர் என்று பாஜக கூறியுள்ளது.