

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட 6 தனியார் நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக தாக்கல் செய்த சிறப்பு மேல் முறையீட்டு மனுவில் 7 குறைபாடுகள் இருப்பதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட 32 தனியார் நிறு வனங்களும் அவரது பினாமி களுக்கு சொந்தமானவை என நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் உள்ளிட்ட 6 தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, “6 தனியார் நிறுவனங்களும் ஜெயலலிதாவுக்கோ, பினாமி களுக்கோ சொந்த மானவை அல்ல'' எனக் கூறி வழக்கில் இருந்து விடுவித்தார்.
இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், 6 தனியார் நிறுவனங்களையும் வழக்கில் இருந்து விடுவித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் சிறப்பு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஆராய்ந்த உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம், ''மனுதாரர் திமுக பொதுச்செயலா ளர் அன்பழகன் குறித்து போதிய தகவல்களை மனுவில் இணைக்கவில்லை. மனு தாக்கல் செய்யப்பட்ட தேதி, மனுவை தயாரித்த வழக்கறிஞர் பெயர் தெரிவிக்கப்பட வில்லை. மனுவில் குறிப்பிடப்பட் டுள்ள முக்கிய ஆவணங்கள் முழு மையாக இணைக்கப்படவில்லை.
மனுவில் 1,451 மற்றும் 1,452-வது பக்கங்களைக் காணவில்லை. 1,140 மற்றும் 1,149-வது பக்கங்கள் தெளிவாக அச்சிடப்படாததால் வாசிக்க இயலவில்லை. தனியார் நிறுவனங்கள் தொடர்பாக தெரி விக்கப்பட்டுள்ள முக்கிய அரசு சான்று ஆவணங்களை மனுவில் இணைக்கவில்லை. மேலும் பின் இணைப்பு எண் 3-ல் தெரிவிக்கப் பட்டுள்ள தகவல்கள் குறித்து உள் ளடக்க நூலில் குறிப்பிடவில்லை'' என்பன உள்ளிட்ட 7 குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளது.
ஜெயலலிதாவின் விடுதலைக்கு எதிராக கர்நாடக அரசு, திமுக தரப்பு தாக்கல் செய்த மனுவில் குறைபாடுகளை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம் தனியார் நிறு வனங்களுக்கு எதிரான மனுவி லும் குறைபாடுகளை சுட்டிக்காட்டி இருப்பது திமுக வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் அதிருப்தியை ஏற் படுத்தியுள்ளது. குறைபாடுகளை சரி செய்து, திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யும் பணியில் திமுக தரப்பு ஈடுபட்டுள்ளது.
திருத்தப்பட்ட திமுக மனு தாக்கல்
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் விடுதலையை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கடந்த 6-ம் தேதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் 9 குறைபாடுகள் இருப்பதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியிருந்தது. அதில் விடுபட்டிருந்த முதல் தகவல் அறிக்கை, அரசு சான்று ஆவணங்கள், பிழைகள் உள்ளிட்ட குறைபாடுகளை சரி செய்யும் பணியை திமுக வழக்கறிஞர்கள் மேற்கொண்டனர். இதையடுத்து திருத்தப்பட்ட மனுவை திமுக வழக்கறிஞர் வி.ஜி. பிரகாசம் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார்.தற்போது அதனை சரிபார்க்கும் பணியில் உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் இறங்கியுள்ளது.