Published : 04 Jul 2015 09:28 AM
Last Updated : 04 Jul 2015 09:28 AM

மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரம் வெளியீடு: சாதி சார்ந்த தகவல்கள் இல்லை

கடந்த 2011-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கியது. சமூக பொருளாதார மற்றும் சாதி வாரியான கணக்கெடுப்பாக இது அமைந்தது. இந்த கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. ஆனால் சாதி சார்ந்த விவரங்களை வெளியிடுவதை அரசு தவிர்த்து விட்டது.

சாதிவாரியாக மக்கள்தொகை விவரங்கள் வெளியிடப்படாதது குறித்து செய்தியாளர்கள், மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்திர சிங்கிடம் கேள்வியெழுப்பினர்.

அவர் கூறும்போது, “சாதி வாரி விவரங்கள் இதில் இல்லை. ஆனால், அதனை தேர்தலோடு தொடர்புபடுத்திக் கூறுவது தவறு. மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறை தலைவரின் முடிவு இது. அவர் மட்டுமே இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க முடியும்” என்றார்.

அவர் மேலும் கூறும்போது, “பொருளாதார தரவுகளில்தான் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். அப்போதுதான், நமது திட்டங்கள் யாருக்குத் தேவை என்பதை முடிவு செய்ய முடியும்” என்றார்.

கடந்த 1931-ம் ஆண்டுக்குப் பிறகு மதம், இனம், சாதி, பொருளாதார அளவீடுகள், வசிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களுடன் எடுக்கப்பட்ட முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும்.

நேற்று வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தியாவில், 24.39 கோடி வீடுகள் உள்ளன. இவற்றில் 17.91 கோடி வீடுகள் கிராமங்களில் உள்ளன. இந்த வீடுகளில் 10.69 கோடி வீடுகள் பின்தங்கியவையாக கருதப்படுகின்றன.

ஊரகப் பகுதியில் உள்ள 5.37 கோடி வீடுகளில் வசிப்பவர்கள் (29.97%) நிலமற்றவர்கள். 2.37 கோடி குடும்பங்கள் ஓர் அறை உள்ள கச்சா வீடுகளில் வசிக்கின்றனர். எஸ்.சி. எஸ்.டி பிரிவைச் சேரந்த 3.86 கோடி குடும்பத்தினர் கிராமங்களில் வசிக்கின்றனர்.

ஊரகப் பகுதியில் வசிக்கும் 4.6 கோடி குடும்பத்தினர் வருமான வரி செலுத்துகின்றனர். இவர்களில் 10 சதவீதத்தினர் மாதாந்திர ஊதியம் பெறுகின்றனர். 3.49 சதவீத எஸ்.சி.க்களும், 3.34 சதவீத எஸ்.டி. பிரிவினரும் வருமான வரி செலுத்துகின்றனர்.

9.16 கோடி குடும்பத்தினர் உடலுழைப்பு தொழிலின் மூலமே வருவாய் ஈட்டுகின்றர். இது 51.14 சதவீதம் ஆகும். அதற்கு அடுத்தபடியாக 30.10 சதவீதத்தினர் வேளாண்மை மூலம் வருவாய் ஈட்டுகின்றனர். தனியார், அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவதன் மூலம் 2.5 கோடி குடும்பத்தினர் வருவாய் ஈட்டுகின்றனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறும்போது, “1932-க்குப் பிறகு சாதிவாரியான தரவுகளைத் திரட்டியிருக்கிறோம். இது மிக முக்கியமான ஆவணம்.

மத்திய மற்றும் மாநிலங்களில் இருக்கும் அரசுகளுக்கு கொள்கைகளை வகுப்பதற்கு இது முக்கியமாக தேவைப்படும். திட்டங்கள் யாரைச் சென்றடைய வேண்டும் என்பதற்கு இது உதவிகரமாக இருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x