Published : 26 May 2014 08:04 PM
Last Updated : 26 May 2014 08:04 PM

வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்: பிரதமர் நரேந்திர மோடியின் முதல் செய்தி

எல்லோரையும் உள்ளடக்கிய வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என்று மக்களுக்கு விடுத்த முதல் செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றவுடன், பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (http://pmindia.nic.in) புதுப்பிக்கப்பட்ட நிலையில் அப்டேட் செய்யப்பட்டது. அதில், மக்களுக்கு தனது செய்தியை மோடி வெளியிட்டார். அதன் விவரம்:

என் இனிய இந்திய மக்களுக்கும், உலகக் குடிமக்களுக்கும்,

வணக்கம்!

இந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு வரவேற்கிறேன்.

மே 16, 2014 அன்று இந்திய மக்கள் தங்களது தீர்ப்பை வழங்கினார்கள். முன்னேற்றத்திற்கான, நிலையான நல்ல அரசுக்கான தீர்ப்பை அளித்தனர். இந்தியாவின் முன்னேற்றத்தைப் புதிய தளத்திற்கு எடுத்துச் செல்ல நாங்கள் எங்களை அர்ப்பணித்துள்ள வேளையில், உங்களது ஆதரவும், ஆசிர்வாதமும், முன்னேற்றத்தில் உங்களது பங்கையும் எதிர்பார்க்கிறோம்.

நாம் ஒன்றாக இணைந்து இந்தியாவிற்கு பிரகாசமான ஓர் எதிர்காலத்தை உருவாக்குவோம். ஒன்றாக இணைந்து வலிமையான, முன்னேற்றமடைந்த, எல்லோரையும் உள்ளடக்கிய, உலக மக்களோடு தீவிரமாக இணைந்து செயல்பட்டு, உலக அமைதியை பலப்படுத்தும் இந்தியாவை உருவாக்கும் கனவை நிறைவேற்றுவோம்.

இந்தத் தளத்தை உங்களுக்கு எனக்குமான நேரடித் தொடர்புக்கு முக்கியமான ஊடகமாக நான் கருதுகிறேன். உலகெங்கிலும் உள்ள மக்களிடம் தொடர்புகொள்ள சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தையும், சமூக ஊடகத்தையும் நான் வெகுவாக நம்புகிறேன். எனவே, இந்தத் தளம் வேண்டியவற்றை கேட்க, தெரிந்துகொள்ள, பார்வைகளை பகிர்ந்துகொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தும் இடமாக இருக்கும் என நம்புகிறேன்.

இந்தத் தளத்தின் மூலமாக எனது சமீபத்திய உரைகள், தினசரி அலுவல் அட்டவணை, வெளிநாட்டு சுற்றுப்பயணம் உள்ளிட்ட பலவற்றையும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். மேலும், இந்திய அரசு மேற்கொள்ளும் புதுமையான முயற்சிகளையும் இந்தத் தளத்தில் உங்களுக்கு நான் தொடர்ந்து தெரிவிப்பேன்.

தங்கள்,

நரேந்திர மோடி

இவ்வாறு அந்தச் செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x