Last Updated : 18 Jul, 2015 05:44 PM

 

Published : 18 Jul 2015 05:44 PM
Last Updated : 18 Jul 2015 05:44 PM

ஜம்மு-காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து மாற்றப்பட முடியாதது: உயர் நீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து சட்டப்பூர்வமாக, அரசியல் சாசனபூர்வமாக மாற்றப்பட முடியாதது, திருத்தப்பட முடியாதது, சுருக்கப் படமுடியாதது என்று ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதிகள் எம்.ஏ.அத்தார், ஏ.எம்.மாக்ரே, ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இது குறித்து தங்களது தீர்ப்பில், 2002-ம் ஆண்டு நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ‘நிதிச் சொத்துக்கள் பாதுகாப்புமயம் மற்றும் மறுகட்டுமானமாக்கம் மற்றும் பாதுகாப்பு நலன் அமலாக்கச் சட்டம்’ ஜம்மு-காஷ்மீரில் அமல் படுத்த முடியாததாகும் என்று கூறியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்காக நாடாளுமன்றம் சட்டங்கள் இயற்றும் அதிகாரம் வரம்புகளுக்குட்பட்டது என்றும், மாநிலம் அனுமதித்தால் மட்டுமே ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்காக சட்டங்கள் இயற்ற முடியும் என்றும், அதுவும் இந்திய அரசியல் சாசனம் பிரிவு 370 வரையறை செய்துள்ள நியதிகளுக்குட்பட்டே சட்டங்கள் இயற்றலாம் என்று தீர்ப்பில் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றினை சுட்டிக்காட்டி தெரிவித்த நீதிபதிகள், “ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தனிப்பட்ட, வேறுபட்ட அந்தஸ்தில் உள்ளது. எனவே சட்டத்தில் ஜம்மு காஷ்மீர் தன்னிலே சிறப்பு தகுதி பெற்றுள்ளது, பிற மாநிலங்களுடன் ஜம்மு-காஷ்மீரை ஒப்பிட முடியாது” என்று கூறியுள்ளனர்.

மேலும், இந்திய அரசியல் சாசனம் பிரிவு 35(ஏ)-வை சுட்டிக் காட்டி, "35-ஏ சட்டப்பிரிவு ஏற்கெனவே உள்ள அரசியல் சாசன, சட்ட நிலைமைகளை தெளிவாகக் கூறியுள்ளது, ஆகவே ஜம்மு-காஷ்மீருக்காக புதிதாக எதையும் சேர்க்க முடியாது.

இந்தப் பிரிவு, நாட்டின் பிற மாநில மக்களுக்கும் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும் இடையிலான அரசியல் சாசன உறவுகளை தெளிவாக எடுத்துரைத்துள்ளது. எனவே ஜம்மு-காஷ்மீர் மாநில குடிமக்கள் தங்களுக்குரிய இறையாண்மை கொண்டுள்ளனர், இதனை மாற்றவோ, சுருக்கவோ முடியாது” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x