

ஹோஷியார் சிங் என்ற தேசிய மட்ட வாள்சண்டை விளையாட்டு வீரரை, லஞ்சம் கொடுக்க மறுத்ததற்காக ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்ததாக ரயில்வே போலீஸ் மீது புகார் எழுந்துள்ளது.
காஸ்கஞ்சிலிருந்து மதுராவுக்கு ரயிலில் பயணம் மேற்கொண்ட போது கடந்த செவ்வாயன்று இந்த துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தலைநகர் டெல்லியிலிருந்து சுமார் 200 கிமீ தொலைவில் உள்ள மதுராவுக்கு காசிகஞ்ச் பகுதியிலிருந்து ரயிலில் தன் மனைவி ஜோதியுடன் ஹோஷியார் சிங் சென்றுள்ளார். ஹோஷியார் சிங் பொதுப் பயணிகள் பெட்டியில் பயணம் செய்ய மனைவி ஜோதி, ஹோஷியார் சிங்கின் உடல்நலம் குன்றிய தாயார், மற்றும் தம்பதியினரின் 10 மாதக் குழந்தை ஆகியோர் மகளிருக்கென்று ஒதுக்கப்பட்ட பெட்டியில் பயணம் செய்துள்ளனர்.
ஹோஷியார் சிங்கின் தாயாருக்கு உடல் நலம் முடியாமல் போனதால் பொதுப் பயணிகள் பெட்டியில் இருந்த கணவருக்கு தான் தொலைபேசி அழைப்பு விடுத்ததாகவும் உடனடியாக மகளிர் பெட்டிக்கு வருமாறு கூறியதாகவும் ஜோதி தெரிவித்தார்.
ஹோஷியார் சிங் மகளிர் பெட்டியில் ஏறிய பிறகு அதிலிருந்த ரயில்வே போலீஸ் அவர் அங்கு ஏற அனுமதியில்லை என்றும் ரூ.200 லஞ்சம் கொடுத்தால் தொடர்ந்து பயணிக்கலாம் என்றும் கூறியதாகவும் அதற்கு அவர் மறுத்ததாகவும் இதனையடுத்து இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்ற அரசு ரயில்வே போலீஸ் அவரை ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்டார் என்றும் மனைவி ஜோதி குற்றம்சாட்டியுள்ளார்.
“என் கணவரிடம் நான் பேசுவதாக அந்தப் போலீஸிடம் மன்றாடினேன். ஆனால் அவர்கள் என் பேச்சை கேட்கவில்லை. வெறும் 200 ரூபாய்க்காக அவரைக் கொன்று விட்டார்கள்” என்று அவர் ஊடகங்களிடம் வெள்ளிக்கிழமையான இன்று தெரிவித்தார்.
மாநில ரயில்வே அமைச்சர் மனோஜ் சின்ஹா இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அரசு ரயில்வே போலீஸ் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது, ஆனால் தப்பித்து விடக்கூடிய பலவீனமான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக ஜோதி குற்றம்சாட்டியுள்ளார்.
மறுக்கும் போலீஸ்:
காவல்துறை கண்காணிப்பாளர் ஜி.என்.கன்னா, ஹோஷியார் சிங் ரயிலிலிருந்து தள்ளிக் கொலை செய்யப்பட்டார் என்பதை மறுத்தார்.
“நாங்கள் விசாரித்த அளவில், தண்ணீர் பிடிக்கச் சென்று திரும்பிய ஹோஷியார் சிங், ரயில் புறப்பட்டு விட்டதால் ஓடி வந்து ஏறினார். ஆனால் அவருக்கு கதவின் பிடி சிக்கவில்லை. இதில் அவர் இடறி தண்டவாளத்தில் விழுந்தார்.
இவர் இடறி பிளாட்பாரத்துக்கும், ரயிலுக்கும் இடையே விழுவதைப் பார்த்த 2 கான்ஸ்டபிள்கள் செயினைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். ரயில்வே ஊழியர் உதவியுடன் ஹோஷியார் சிங்கின் உடல் தண்டவாளத்திலிருந்து மீட்கப்பட்டது. இதில்தான் தவறாக புரிந்து கொண்டனர். கான்ஸ்டபிள்கள் அவரைத் தள்ளி விட்டதாக கருதினர். அப்படியே கூச்சல் போட்டனர்” என்று மறுத்துள்ளார்.
ஹோஷியார் சிங் 2005-ம் ஆண்டு கேரளாவில் அண்டர்-17 சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2011-ம் ஆண்டு தேசிய வாலிபால் வீராங்கனை அருனிமா சிங் ரயிலிலிருந்து தள்ளப்பட்டதால் தனது வலது காலை இழந்தார் என்று குற்றச்சாட்டு எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.