Last Updated : 16 Jul, 2015 07:40 PM

 

Published : 16 Jul 2015 07:40 PM
Last Updated : 16 Jul 2015 07:40 PM

ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரத்தை தொகுக்க நிபுணர் குழு அமைத்தது மத்திய அரசு

ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரம் வெளியிடப்படாதது குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இந்த விவரங்களை தொகுப்பதற்காக நிதி ஆயோக் துணைத்தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையில் நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரத்தை வகைப்படுத்தும் பணியை மேற்கொள்ள நிதி ஆயோக் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையில் நிபுணர் குழு அமைப்பது என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி முடிந்ததும் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2011-ம் ஆண்டு மே மே மாதம் எடுத்த முடிவுபடியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால் அரசியல் காரணங்களுக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரத்தை அரசு வெளியிடவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

இந்திய தலைமைப் பதிவாளர் துறை மூலம் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரத்தில் ஜாதி, துணை ஜாதி, பலதரப்பட்ட இனம் என மொத்தம் 46 லட்சம் பிரிவுகள் உள்ளன. இவற்றை ஜாதி தொகுப்பாக ஒருங்கிணைப்பது குறித்த பரிந்துரையை அனுப்பும்படி 8 மாதங்களுக்கு முன்பே மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டது.

மாநிலங்கள் இந்தப் பரிந்துரையை விரைவாக அனுப்பி வைத்தால்தான், ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வகைப்படுத்தும் பணியை வல்லுநர் குழு தொடங்க முடியும். இதன்மூலம் மிக விரைவாக ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரத்தை அரசு வெளியிட முடுயும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x