

சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்துதல் மசோதா குறித்து நுண்ணாய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய ஆகஸ்ட் 3 வரை கால நீட்டிப்பு தரப்பட்டுள்ளது. இந்த கால நீட்டிப்புக்கு மக்களவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இதுதொடர்பான தீர்மானத்தை குழு தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா தாக்கல் செய்தார். லலித் மோடி தொடர்பான சர்ச்சைக்கு இடையை மக்களவையில் குரல் வாக்கெடுப்பில் இந்த தீர்மானம் ஏற்கப்பட்டது.
அறிக்கை தாக்கலுக்கு கால நீட்டிப்பு கோரி மக்களவைத் தலைவரை இரண்டு முறை அணுகியுள்ளார் அலுவாலியா. நேற்று முன்தினம் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கவேண்டும்.
2013-ல் கொண்டுவரப்பட்ட நில மசோதாவில் உத்தேசித்துள்ள திருத்தங்கள் தொடர்பாக அரசிடம் விளக்கம் கோர சில உறுப்பினர்கள் விரும்புவதால் கால நீட்டிப்பு கோரப்பட்டுள்ளது. மேலும் சில விவகாரம் பற்றி விளக்கம் கேட்டிருந்த நிலையில் கடந்த 16-ம் தேதி நடந்த குழு ஆலோசனைக் கூட்டத்துக்கு பல்வேறு காரணங்களால் 3 செயலர்கள் வரவில்லை.
நில மசோதா தொடர்பான அவசர சட்டம் 3-வது முறையாக மே 31-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதை அரசு நியாயப்படுத்தி அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளது.
அவசரச் சட்டத்தின் ஆயுள் 6 மாதம் ஆகும். கூட்டத்தொடர் தொடங்கி 6 வாரத்துக்குள் இதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் தராவிட்டால் மீண்டும் அவசர சட்டத்தை பிறப்பிக்கவேண்டும். மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி முடிகிறது.