

திருவனந்தபுரம்: கேரளத்தின் மலப்புரம் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். ஒரு பெண்ணைக் காணவில்லை. இதுகுறித்து கேரள போலீஸார் கூறியதாவது: கேரளத்தின் மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் அருகே உள்ள பூக்கோட்டும்படம் புகழ்பெற்ற சுற்றுலா தலம் ஆகும். அங்குள்ள வனப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டிருந்தனர்.
அவர்களில் சிலர் கொட்டப்புழா ஆற்றின் நடுவே உள்ள பாறைகளில் அமர்ந்து செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் 9 பேர் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். 3 பேர் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டனர். படுகாயம் அடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
கேரளத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முகமது குட்டி (65), அனஸ் (27), ரஹீம் (35), சாஜத் (23), ரபீக் (41) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். பிரேதப் பரிசோதனைக்காக மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவர்களின் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
பூக்கோட்டும்படம் அருகே உள்ள டி.கே. காலனியைச் சேர்ந்த சஜிதா ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். காட்டாற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட அவரை காணவில்லை. அவரை மிகத் தீவிரமாக தேடி வருகிறோம். இவ்வாறு கேரள போலீஸார் தெரிவித்தனர்.
கனமழை எச்சரிக்கை
கடந்த சில நாட்களாக கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதன்படி இடி, மின்னலுடன் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும். மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நதிகளின் கரையோரம் வசிப்போர், நிலச்சரிவு அபாயம் உள்ள மலைப்பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மழை பாதிப்பு குறித்து ஒவ்வொரு மணி நேரமும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் சதீசன் உத்தரவிட்டுள்ளார்.