கேரளம் - மலப்புரத்தில் திடீர் வெள்ளம்: 5 பேர் உயிரிழப்பு

கேரளம் - மலப்புரத்தில் திடீர் வெள்ளம்: 5 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

மலப்புரம்: கேரளம் மாநிலம் மலப்புரத்தின் நிலம்பூரில் உள்ள கோட்டப்புழா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், வெள்ளத்தில் சிக்கி மாயமான ஒருவரை தேடும் பணி நடைபெறுகிறது.

நிலம்பூர் - டி.கே காலனிக்கு அருகில் பூக்கொட்டும்படம் என்ற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (செப்.20) மாலை இந்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மயமானவர்களில் ஐந்து பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் மாயமான மற்றொருவரான சஜிதாவை தேடும் பணி நடைபெறுகிறது. மீட்பு பணியில் அம்மாநில தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதில் திரூரைச் சேர்ந்த முகமது குட்டி (65), கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்த அனாஸ் (27), கருவார்குண்டு பகுதியைச் சேர்ந்த ரஹீம் (35), வாண்டூரைச் சேர்ந்த சஜித் (23) மற்றும் ரபீக் (41) ஆகியோர் உயிரிழந்தனர். திடீர் வெள்ளம் ஏற்பட்டதால் அங்கு ஆடைகளை துவைத்துக் கொண்டிருந்த சஜிதாவும் மாயமானார். அவரை தேடும் பணி நடைபெறுகிறது.

கோட்டப்புழா ஆற்றுப்படுகையில் பெரிய அளவிலான பாறைகள் உள்ளன. அதனால் இந்த இடம் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களை கவர்கிறது. ஆற்றில் உள்ள பாறைகள் மீது ஏறி, அங்கு அமர்ந்து, மக்கள் பொழுதை செலவிடுவது வழக்கம். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் அங்கு அதிகம் காணப்பட்டது.

இந்தச் சூழலில் நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென ஆற்றில் நீர் அதிகரித்தது. ஆற்றின் உச்சியில் உள்ள காடுகளில் மழை பொழிவு மற்றும் அங்குள்ள ஓடைகளில் நீர் அதிகரித்த காரணத்தால் கோட்டப்புழா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கலாம் எனத் தகவல். அதில் சிக்கியவர்கள் அடித்து செல்லப்பட்டனர். இது அனைத்தும் சில வினாடிகளில் நடந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

ஆற்றில் எப்போது நீர் அதிகரிக்கும் என்பது நம்மால் கணிக்க முடியாது. காட்டுப் பகுதிகளில் மழை பதிவாகும் போது ஆற்றில் நீரின் அளவும், அதன் பாய்ச்சலும் அதிகரிக்கும். ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது அதுதான் என்று உள்ளூரை சேர்ந்த முபாரக் தெரிவித்துள்ளார். மேலும், இனி இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கை வேண்டும் என்று உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். குறைந்தபட்சம் மழைக்காலங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு கேரளம் வருவாய் துறை அமைச்சர் அனில் குமார் நேரில் வந்து, மீட்பு பணிகளை பார்வையிட்டார். அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் பஷீர், உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கேரளம் முதல்வர் வி.டி.சதீசன், இன்று சம்பவ இடத்துக்கு வர உள்ளார்.

கேரளம் - மலப்புரத்தில் திடீர் வெள்ளம்: 5 பேர் உயிரிழப்பு
தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in