

புதுடெல்லி: இந்தியாவுக்கான 4-வது எஸ்-400 வான் பாதுகாப்பு கவச வாகனத்தை ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 வான் பாதுகாப்பு கவச வாகனம் வாங்க கடந்த 2018-ல் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதன்படி 5 எஸ்-400 பாதுகாப்பு கவசங்களை ரஷ்யா வழங்க வேண்டும். இதுவரை 3 எஸ்-400 பாதுகாப்பு கவசங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இவை பாகிஸ்தான், சீன எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில் 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கையின் ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, ரஷ்யாவின் நான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது மே மாத மத்தியில் இந்தியத் துறைமுகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக `ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது எஸ்-400 கவச வாகனம் மிகச் சிறப்பாக செயல்பட்டது. இதில் உள்ள ஏவுகணைகள் பாகிஸ்தானில் சிந்து நதிக்குக் கிழக்கே உள்ள எந்தவொரு வான்வழி இலக்கையும், 400 கி.மீ. தொலைவிலிருந்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை ஆகும்.
இந்தியா வரவிருக்கும் எஸ்-400 கவச வாகனத்தை ஆய்வு செய்யும் பணி ஏப்ரல் 18-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து கடந்த வாரம் ரஷ்யாவிலிருந்து கப்பல் மூலம் இது இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான ஏவுகணைப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இது ராஜஸ்தான் எல்லையில் நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவில் இருந்து 5-வது எஸ்-400 பாதுகாப்பு கவசம், இந்த ஆண்டு நவம்பரில் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரஷ்யாவிடம் இருந்து மேலும் 5 எஸ்-400 கவச வாகனங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.