

போலி கல்விச் சான்றிதழ் விவகாரத் தால் பிஹார் மாநிலத்தில் 1,400 அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக பணியை ராஜி னாமா செய்துள்ளனர். அடுத்த சில நாட்களில் மேலும் நூற்றுக்கணக் கான ஆசிரியர்கள் பணியை விட்டு விலகுவார்கள் என்று மாநில கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிஹார் மாநில அரசு ஆரம்ப பள்ளிகளில் சுமார் 3.5 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்ற னர். அவர்களில் பலர் போலி கல்விச் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்திருப்பதாக நீண்ட காலமாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக ரஞ்சித் பண்டிட் என்பவர் பாட்னா உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இதனை தலைமை நீதிபதி நரசிம்ம ரெட்டி, சுதிர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தர வில், போலி கல்விச் சான்றிதழ் அளித்துள்ள ஆசிரியர்கள் வரும் 8-ம் தேதிக்குள் தாங்களாகவே முன்வந்து பணியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பிஹார் மாநிலம் முழுவதும் சுமார் 1,400 ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக பணியில் இருந்து விலகியுள்ளனர். அவர்கள் தங்கள் ராஜினாமா கடி தத்தை சம்பந்தப்பட்ட கல்வித் துறை அதிகாரிகளிடம் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக மாநில கல்வித் துறை முதன்மைச் செயலாளர் ஆர்.கே.மகாஜன், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இதுவரை 1,400 ஆசிரி யர்கள் ராஜினாமா செய்துள் ளனர். வரும் நாட்களில் மேலும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பணியை விட்டு விலகுவார்கள் என்று தெரிகிறது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் போலி ஆசிரியர்கள் பணியை விட்டு விலகாவிட்டால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். வழக்குகள் பதிவு செய்யப்பட்டு போலீஸ் விசாரணை நடைபெறும். பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதோடு இதுவரை பெற்ற ஊதியம், இதர சலுகைகளும் திரும்பப் பெறப் படும். இவ்வாறு அவர் தெரிவித் தார்.
பிஹார் அரசு உத்தரவு
உயர் நீதிமன்ற உத்தரவை யடுத்து மாநிலம் முழுவதும் போலி ஆசிரியர்களை கண்டறிய லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுவினர் அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகளை முழுமையாக ஆய்வு செய்ய உள்ளனர். இதற்கு 4 மாதங்கள் வரை தேவைப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு அவகாசம் கோரியுள்ளது.
பிஹார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலின்போது கல்வித் துறை முறைகேடுகளை முன்வைத்து பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.