

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 3 மாநிலங்களில் மொத்தம் 9 இடங்களையே வென்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தேசியக் கட்சி என்ற தகுதிக்குத் தேவையான 11 இடங்களை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேசியக் கட்சி தகுதிக்கு 3 மாநிலங்களில் போட்டியிட்டு குறைந்தது 11 இடங்களில் வெற்றி பெறுவது அவசியம் என்கிறது தேர்தல் ஆணையம்.
தற்போது கேரளாவில் தங்கள் ஆதரவில் வெற்றி பெற்ற 2 சுயேட்சை வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுத்து தேசியக் கட்சி அந்தஸ்தைத் தக்கவைக்க சிபிஎம் கட்சி முடிவெடுத்துள்ளதாக பொலிட் பீரோ உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் கொடுத்த அடியிலிருந்து எழும்ப முடியாமல் தவித்து வரும் சிபிஎம், நடந்து முடிந்த தேர்தலில் மோடியினால் எழுச்சியுற்ற பாஜகவையும் எதிர்கொள்ள நேரிட்டது.
மேற்குவங்கத்தில் 2 இடங்களில் சிபிஎம் வெற்றி பெற்றது. முர்ஷிதாபாத், ராய்கஞ்ச் என்ற இந்த இரண்டு தொகுதிகளும் காங்கிரஸ் கட்சியின் பலமாக இருந்து வந்தது. மூத்த சிபிஎம் வேட்பாளரான பாசுதேவ் ஆச்சாரியாவே இந்த முறை தோல்வி முகம் கண்டுள்ளார்.