

‘‘விவசாயிகளின் சாபம், எல்லாவற்றையும் அழித்துவிடும்’’ என்று மகாராஷ்டிர அரசுக்கு கூட்டணிக் கட்சியான சிவசேனா எச்சரித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பயிர்கள் பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் கடன் தொல்லையில் தவிக்கின்றனர். நெருக்கடி தாங்க முடியாமல் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில், விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், கடனை ரத்து செய்ய இயலாது என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதற்கு கூட்டணிக் கட்சியான சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் சிவசேனா கூறியிருப்பதாவது:
விவசாயிகளின் ஆதரவில்தான் பாஜக ஆட்சிக்கு வந்தது. அவர்கள்தான் மன்னர்கள். அவர்கள் ஒருவர் வீட்டின் முன்பு பிச்சைக்காரர்கள் போல் கையேந்தி நிற்க கூடாது. அவர்கள் சாபம் இட்டால், எல்லா விஷயங்களும் அழிந்துவிடும். எனவே, அவர்கள் சாபம் பலிக்காமல் போவதற்கு, விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
விவசாய கடன்களை அரசு தள்ளுபடி செய்தால், விவசாயிகள் தற்கொலை நின்றுவிடுமா? என்று கேட்கின்றனர். பிறகு வேறு எதுதான் தற்கொலைகளை தடுத்து நிறுத்தும். விவசாய கடன் களை ரத்து செய்ய முடியாது என்று முதல்வர் பட்னாவிஸ் பிடிவாதமாக இருக்கிறார் என்று கூறுகின்றனர். அப்படியானால், விவசாயிகளின் வாழ்க்கைக்கு, உயிருக்கு அவர் எந்த வகையில் உத்தரவாதம் அளிக்கப் போகிறார் என்பதை விளக்க வேண்டும்.
மாநிலத்தில் சில இடங்களில் அதிக மழையாலும், சில இடங்களில் மழையே இல்லாமலும் பயிர்கள் நாசம் அடைந்துவிட்டன. வங்கிக் கடன், வட்டிக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். அதனால், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
விவசாயிகள் தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று முதல்வர் விரும்புவதாக கூறுகின்றனர். அது நல்ல விஷயம்தான். ஆனால், சொந்த காலில் விவசாயிகள் நிற்பதற்கு அரசு என்ன செய்யப் போகிறது? விவசாயிகளின் கடின உழைப்பால்தான் மக்கள் சாப்பிடுகின்றனர் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவ்வாறு சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.