

வரிஏய்ப்பு வழக்கு தொடர்பாக ஸ்பைஸ் ஜெட் லிமிடெட், அதன் முன்னாள் தலைவர் கலாநிதி மாறன், நிர்வாக இயக்குநர் நட்ராஜன் ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்பியது.
கடந்த 2013-14-ம் நிதியாண்டில் ஸ்பைஸ் ஜெட் நிறுவன ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.110.6 கோடி டிடிஎஸ் தொகை, 2014-15-ம் நிதியாண்டுக்கான ரூ.36.5 கோடி டிடிஎஸ் தொகை உரிய காலத்தில் வருமான வரித்துறையிடம் செலுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வருமான வரித் துறை டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் பிரித்தம் சிங் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அதனை விசாரித்த மாஜிஸ் திரேட், விமான போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் லிமிடெட், அதன் முன்னாள் தலைவர் கலாநிதி மாறன், நிர்வாக இயக்குநர் நட்ராஜன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பினார். அவர்கள் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.