Last Updated : 13 Jul, 2015 08:01 PM

 

Published : 13 Jul 2015 08:01 PM
Last Updated : 13 Jul 2015 08:01 PM

பொருளாதார வளர்ச்சியின் சிறந்த நண்பனாக வறுமை இருப்பது ஏன்?

சமூக-பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு, 2011, அறிக்கை இந்த மாத தலைப்புச் செய்திகளை ஆக்ரமித்தன, காரணம், இந்தியாவில் கிராமப்புற மக்கள் தொகையில் பாதிபேர் நிலமற்ற கூலிகளாக உள்ளனர் என்பதே.

இந்த அறிக்கை உணர்த்துவது என்னவெனில், முன்னதாக மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையை விட இந்தியாவில் வறுமை அதிகமாக உள்ளது என்பதே. மேலும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு உணர்த்தும் மற்றொரு விஷயம் என்னவெனில் ஏழைமக்களின் கணக்கெடுப்பு சரியான முறையில் இதுவரை நடைபெற்றுள்ளதா என்பதே.

கணக்கெடுப்புக்காக கடைபிடிக்கப்படும் முறையியல் மீதான கருத்து வேறுபாடுகள் ஒருபுறம் இருக்கட்டும், சாதிவாரி கணக்கெடுப்பு 2011, கூறும் கிராமப்புற ஏழைகள் பற்றிய விவரங்கள் ஒரு சீரிய கண்ணோட்டத்துக்கு உட்படுத்தப் படவேண்டியவை என்பதை வர்ணனையாளர்கள் பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

நிரூபணம் சார்ந்த கொள்கை-உருவாக்கம் தேவை என்பதை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அது எவ்வளவு சரியாக வேலை செய்யும்?

உதாரணமாக, முந்தைய கணிப்பை விட தற்போதைய கணக்கீடு இந்தியாவில் ஏழைகள் எண்ணிகை அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. முன்பு நினைத்ததைவிட தற்போது இவர்கள் இன்னும் மோசமான இல்லாமையில் உழன்று வருகின்றனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது. ஆகவே இந்திய ஆட்சியாளர்களின் 'வளர்ச்சி மாதிரி' இந்தியாவின் பொருளாதார கொள்கை மாற்றி அமைக்கப்படும் வாய்ப்பு உள்ளதா? அல்லது 2015-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், நிதியமைச்சர் விலக்கிய சமூக நல செலவினங்களை மீண்டும் அளித்து விடுவாரா? நிலமற்றவர்களின் எண்ணிக்கை பரவலாக உள்ளது என்று இப்போது நமக்கு தெரிகிறது, அதனால் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற்று விடுமா?

இவையெல்லாம் நடக்குமா அல்லது மீண்டும் வழக்கமான நடைமுறைகள் தொடருமா? சமூக-பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி அருண் ஜேட்லி முரணற்ற பதிலை அளித்துள்ளார், “இல்லாமையை ஒழிக்க 8% பொருளாதார அதிவேக வளர்ச்சியே சிறந்த வழி” என்று கூறியுள்ளார்.

வறுமையை ஒழிக்க ஏற்கெனவே நிலையாக உள்ள வழிமுறைகளையே ஜேட்லியின் கருத்தும் எதிரொலிக்கிறது. இது குறித்து வணிகத்துறை பத்திரிகை தலையங்க்கள் சிலவற்றை எடுத்ட்துக்காட்டாக பார்த்தோமானால், “இந்தியா வேகமாக வளர வேண்டும்.. வேளாண் துறையிலிருந்து நிறைய பேரை நகர்த்த வேண்டியுள்ளது” என்று ஒரு தலையங்கம் கூறுகிறது, மற்றொன்றோ, இந்த தரவுகள் வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளது. அதாவது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வறுமை பற்றிய காரண-காரியங்களை ஆராய அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது” என்று கூறுகிறது.

நாம் உண்மையில் இந்த 2011 அறிக்கை மூலம் வெளியாகியுள்ள தகவல்களுக்காக 67 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா? அல்லது வறுமைக்கான காரணங்களை புரிந்து கொள்வது என்பதல்ல இந்த விவகாரம் என்று பார்ப்பது சாத்தியமா? அதாவது, நமது கொள்கை - உருவாக்க கர்த்தாக்களின் அக்கறை என்னவெனில் வறுமையின் காரணங்களை ஆராய்வது அல்ல, மாறாக தீர்வு பற்றியதா? (அதாவது வளர்ச்சி, மேம்பாடு).

வறுமை-வளர்ச்சி எனும் கூத்து

வரலாற்றில் பல்வேறு காலக்கட்டங்களில் மனிதர்கள் வறுமை பற்றிய பலதரப்பட்ட பண்பாட்டு கருத்தாக்கங்களைக் கொண்டிருந்தனர். இவை அனைத்தும் எதிர்மறையானவை அல்ல. இன்னும் சொல்லப்போனால், இந்தியா ஒருவகையான பின்-நவீன, போலி வேதகலாச்சாரத்தை மீட்டெடுத்தது.

துணைக்கண்டம் என்பது சிக்கனம், மிதவாதம், வறுமையை விரும்பி ஏற்றல் என்ற நீண்ட-பண்டைய மரபை தன்னகத்தே கொண்டது. இதன் மூலம் ஒரு ஆன்மீக மூலதனத்தையும் அது தன்னுடனே சுமந்து வந்தது. மேற்கு அல்லாத பிற பண்பாடுகளுக்கும் இது பொருந்தும்.

வறுமையை சமுதாய-பண்பாட்டு-அரசியல் பிரச்சினைகளுக்குள்ளாவது என்பது சமீபத்திய நிகழ்வே. மானுட முழுமையான பண்பாடு, அரசியல் மற்றும் சமூகம் ஆகியவற்றிலிருந்து தனித்து இயங்கும் தன்னாட்சியாக பொருளாதாரத்துறை வளர்ச்சியடைந்ததுடன் இந்த பிரச்சனைகள் தொடர்புடையது.

இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில்தான் வறுமை என்பது கண்ணுக்கு தெரியும் ஒரு விவகாரமாகியுள்ளது- அதாவது வளர்ச்சி, மேம்பாடு என்ற சொல்லாடல்களால்- வறுமை உலகளாவிய பிரச்சினைப்பாடாகியுள்ளது.

வளர்ச்சி-மேம்பாட்டு வாதங்களுக்கு எதிரான விமர்சகர்கள், இந்த 'வளர்ச்சி-மேம்பாடு எந்திரம்' எழுச்சி பெற 3 வரலாற்று காரணிகளை குறிப்பிடுகின்றனர்

1. மூன்றாம் உலக மக்கள் தொகை மற்றும் புவியியல்கள் மீதான நேரடியான அரசியல் ஆதிக்கம் முடிவுற்ற காலனியாதிக்க வீழ்ச்சி காலக் கட்டம்.

2. உலக முதலாண்மையின் மையம் பிரிட்டனிலிருந்து அமெரிக்காவுக்கு மாறியது.

3. சோவியத்தில் கம்யூனிஸம் வளர்ச்சியுற்றது.

இந்த மூன்று காரணிகளும் சேர்ந்து மேற்கத்திய மூலதனத்துக்கு சீரியஸான சவால்களை ஏற்படுத்தியது. அவை: தொழிற்துறை மூலப்பொருள்களுக்கான புதிய ஆதாரங்களை பெறுதல்.

உபரி மூலதனத்தை முதலீடு செய்ய புதிய நாடுகளை அடைதல், மற்றும் உற்பத்திப் பொருட்களூக்கான புதிய சந்தைகளை உருவாக்குதல். கம்யூனிச அச்சுறுத்தலில் இருந்து மூலதன உலகை பாதுகாப்பு எய்தச் செய்வது.

இந்த அனைத்து சவால்களுக்கும் அமெரிக்கா கண்டடைந்த விடைதான், மூலதனம், அறிவியல், தொழில்நுட்பம் மூலம் தேங்கிய நாடுகளை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்வது.

இந்தக் கொள்கை செயல்முறையில் இரட்டை தந்திரமாக மாறியது. ஐரோப்பிய கூட்டணி நாடுகளுக்காக ஒரு கொள்கை உத்தியும், ஐரோப்பியர் அல்லாதவர்களுக்காக மற்றொரு கொள்கை உத்தியும் வகுக்கப்பட்டன.

ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா, இலவச மூலதனத்தை வழங்கி, பிரிட்டன், பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் போரினால் சீரழிந்த தங்கள் பொருளாதாரங்களை மறுகட்டுமானம் செய்ய உதவிபுரிந்தது. ஒரு 120 பில்லியன் டாலர் (இப்போதைய டாலர் மதிப்பின் படி) உதவியளிக்கப்பட்டது. இது புது செவ்வியல் பொருளாதாரக் கொள்கையின் அனைத்து விதிகளையும் மதிப்பற்றதாக்கியது.

2-வதான ஐரோப்பா அல்லாத நாடுகளுக்கு சர்வதேச நிதியம் (ஐ.எம்.எஃப்.) மற்றும் உலக வங்கி போன்ற நிதி அமைப்புகளை உருவாக்கியது. இதன் முதன்மைப் பணி என்னவெனில் வளரும் மற்றும் வளராத நாடுகளின் மூலை முடுக்கெல்லாம் முதலாண்மையை உறுதி செய்து நிறுவுவது.

ஆனால், புதிதாக சுதந்திரம் பெற்ற இந்த புதிய நாடுகள், தங்களது முந்தைய அடக்குமுறையாளர்களிடமிருந்து பொருளாதார அறிவுரையை ஏன் பெறவேண்டும்?

இங்குதான் வறுமை மற்றும் வளர்ச்சி குறித்த சொல்லாடல்கள் தங்கள் வேலையைத் 'திறம்பட' செய்கின்றன. இந்த இடத்தில்தான் புதிய பொருளாதாரக் கொள்கைகள் ஐ.எம்.எஃப். மற்றும் உலக வங்கி மூலமாக வளரும், வளராத நாடுகள் மீது திணிக்கப்படுகின்றன. இந்த நிதி நிறுவனங்கள் மேற்கத்திய மூலதனத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் அதே வேளையில் மூன்றாம் உலக நாடுகளின் தேசிய-அரசுகளின் மேட்டுக்குடியினருடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.

அதன் தேசங்கடந்த வளர்ச்சிவாத, முன்னேற்றவாத நிபுணர்கள் என்ற படையுடன், காலனியாதிக்கம் என்ன செய்ததோ அதையே மீண்டும் இந்நாடுகள் மீது செலுத்தி வருகிறது. இதன் மூலம் முதலாம் அகிலமான பணக்கார நாடுகள் மூன்றாம் அகிலமான ஏழைநாடுகள் மீது பொருளாதார ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்த ஆதிக்கத்தை, நிதியுதவி திட்டங்களுடன் 'வளர்ச்சி குன்றிய நாடுகள்' என்று குறிக்கப்படும் நாடுகள் பற்றிய அறிவுத் தொகுதியை உருவாக்குகிறது. இந்த அறிவு எப்படி மேலாண்மை செய்யப்படுகிறது எனில் நிறைய ஆய்வுகள், கோட்பாட்டு மாதிரிகள் ஆகியவற்றைக் குறிக்கும், உருவாக்கும் ‘வளர்ச்சி பொருளாதாரம்’ என்ற துறையின் மூலம் நிகழ்த்தப்படுகிறது.

வளர்ச்சிக் கோட்பாட்டாளர்களான ஆர்துரோ எஸ்கோபார், வுல்ஃபாங் சாக்ஸ் மற்றும் மாஜித் ரஹ்னிமா ஆகியோர் வளர்ச்சிப் பொருளாதாரம் என்ற சொல்லாடல் எப்படி ஒரு 'பிரதிநிதித்துவ’ செயல்பாட்டை புரிகிறது என்பதையும் இந்தப் பிரதிநிதித்துவ செயல்பாடு, மனித வாழ்க்கையை, மனித அனுபவத்தை ஒற்றை அளவில் சுருக்குகிறது என்றும் வெளிப்படுத்தியுள்ளனர். அதாவது நில உரிமை, எவ்வளவு கலோரிக்கள் நுகரப்படுகிறது, போன்ற ஒற்றை அளவுகோல்களுக்கு மனித வாழ்க்கை குறுக்கப்பட்டு வறுமையின் நோய்கூறுகளினால் உலகின் 3-இல்2 பங்கு மக்கள் எப்படி அவதியுறுகின்றனர் என்று மறுவடிவமைப்பு செய்து இதற்கு ‘வளர்ச்சி’ என்பதே உதவிபுரியும் என்றும், ஐ.எம்.எப், உலக வங்கி இதற்கான சிகிச்சையை அளித்து வருவதாக உலகை நம்பவைப்பதாகவும் இந்த கோட்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நோயைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக ஐ.எம்.எஃப்., உலக வங்கியின் சிகிச்சை முறைகள் இயல்பான நோய்தடுப்பு ஒழுங்கை மேலும் சீர்குலைப்பதே நடந்து வருகிறது.

இது குறித்து ஆர்துரோ எஸ்கோபார் தனது Encountering Development என்ற நூலில் நுணுக்கமாக தெரிவிக்கும் போது, “1950-ம் ஆண்டுகளில் கோட்பாட்டாளர்களும் அரசியல் தலைவர்களும் வாக்குறுதி அளித்த செல்வச் செழிப்பு என்பதற்குப் பதிலாக வளர்ச்சி குறித்த சொல்லாடல்களும், உத்திகளும் அதற்கு நேர் எதிரான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான வளர்ச்சியின்மை, வறுமை உருவாக்கம், சொல்லப்படாத சுரண்டல் மற்றும் அடக்குமுறை ஆகியவையே நிகழ்ந்துள்ளன. வறுமை அதிகரிப்பு, ஊட்டச்சத்தின்மை, வன்முறை ஆகியவையே 40 ஆண்டுகால வளர்ச்சியின் நோய்க்கூறு அறிகுறிகளாக இருந்து வருகிறது” என்று கூறுகிறார்.

வளர்ச்சி குறித்த சொல்லாடல்களின் நயமிகு கவர்ச்சிக்கண்ணிக்கு எஸ்கோபார் கூறுவது ஒரு வாக்குமூலம் போல் அமைந்துள்ளது. 6 பத்தாண்டுகளாக இவை கடும் தோல்விகளைச் சந்தித்த போதும் சமூகக் கற்பனை வெளியில் வளர்ச்சி, முன்னேற்றம் என்பது இன்னும் சக்தி வாய்ந்த கருத்தோட்டமாக இருந்து வருகிறது.

உலக மூலதனத்தின் சேவையில் வறுமையும் வளர்ச்சியும் பிரிக்க முடியாத தோழர்களாகி உலகில் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்துடன் கூத்து நடத்தி வருகிறது.

வரலாறு மீண்டும் திரும்புதல்

60,70,80, 90-ம் ஆம் ஆண்டுகளில் லத்தீன் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பலமுறை நடத்திக் காட்டப்பட்ட இந்த வளர்ச்சித் திருவிளையாடல் இங்கு, இப்போது நடத்திக் காட்டப்பட்டு வருகிறது. மேலும் ஒரு மத்திய ஆட்சி பலகோடி ஆன்மாக்களை வளர்ச்சி என்ற தோட்டப்பாதை வழியாக அழைத்துச் செல்ல பிரயத்தனம் செய்து வருகிறது.

எனவே சமீபத்திய சமூக-பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பைச் சாட்சியாக வைத்து கொள்கை உருவாக்கும் விவகாரத்துக்குத் திரும்புவோம். 67 ஆண்டுகால 'வளர்ச்சி' இந்தியாவில் இல்லாமையை போக்க முடியவில்லை. எனினும் இதுபற்றிய விமர்சன ஆய்வுகள் ஏற்கெனவே இருக்கும் ‘பொது நம்பிக்கை’யான ஏழைகள் அடிப்படை பொருளாதார பொருள்கள் இன்றி வாடுகின்றனர், ஆகவே அவர்கள் சந்தையை அவர்கள் தழுவ வேண்டும், அவர்களது உற்பத்தித் திறனை அதிகப்படுத்த வேண்டும், வருவாயைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்ற தேய்ந்த வழக்குகளுக்கு மீண்டும் ஒரு முறை நீட்டிக்கப்படமுடியாததாகும்.

ஒரு புறம் தொழிற்துறை சார்ந்த வளர்ச்சி, அதன் உறுதுணையான, மக்கள் தங்கள் இடங்களை விட்டு பிழைப்புக்காக வெளியேறுதல், தங்கள் உடைமை/உரிமைகளை இழத்தல், மற்றும் விவசாயிகளை கூலிகளாக மாற்றுதல் ஆகியவற்றுடன் நிலம், நீர், மற்றும் பிற சமுதாய ஆதாரங்களை துண்டித்து மேலும் பல இல்லாமைகளின் கூட்டமாக, தொகுதிகளாக மாற்றப்பட்டு வருகிறது. மறுபுறம் இந்த உருவாக்கப்பட்ட ஏழ்மை, இல்லாமைகளே சந்தைப் பொருளாதாரத்தை மேலும் இறுக்கமாக அணைப்பதற்கான காரணங்களாகவும் சேவையாற்றுகிறது. இந்தக் கொள்கைதான் ஐ.எம்.எஃப், உலக வங்கி ஆகிய பிரெட்டன் - உட்ஸ் நிதி நிறுவனங்களின் வளர்ச்சி என்ற பெயரில் செலுத்தும் வலுத்தாக்குதலாகவும் உள்ளது.

வருவாய் அல்லது நுகர்வைக் கொண்டு வறுமைக்கு விளக்கம் அளிக்க எந்த ஒரு இயல்பான காரணமும் இல்லை. மாறாக, தங்கள் வாழ்க்கை வாய்ப்புகளை தீர்மானிக்கும் காரணிகள் மீது மக்கள் எந்த அளவுக்கு கட்டுப்பாடு கொண்டுள்ளார்கள், அதாவது இது நிதிபொருளாதராத்துடன் தொடர்புடையதாகவோ அல்லது தொடர்பற்றதாகவோ இருக்கலாம். வறுமையை மக்களின் அரசியல் முகமை மூலமும் விளக்கமுடியும்.

வருவாய் வரம்புகள் மூலம் வறுமையை விளக்குவதென்பது வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் மக்கள் தொகுதிக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம், இதுதான் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் மேலே குறிப்பிட்ட வணிகத்துறை பத்திரிகைகளின் தலையங்கங்கள் நமக்கு எடுத்துரைக்கிறது.

பொருளாதாரம் நமது பொதுப்புத்தியை எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறது என்றால், பொருளாதார ரீதியான முன்னேற்றம் வளர்ச்சி என்ற ஒன்றைப் பற்றி சிந்திக்காத சமூக மாற்றம் பற்றிய மாற்றுச் சிந்தித்தலையே மழுங்கடித்துள்ளது.

காலனியாதிக்கத்துக்கு முன்பாக சமூகங்கள் எப்படி மாறுதலடைந்தன? அதாவது வளர்ச்சி என்ற யுகத்துக்கு முன்னதாக? தேவைக்குத்தான் உற்பத்தியே தவிர குவிப்புக்காக, சேர்ப்புக்காக, செல்வப் பெருக்குக்காக அல்ல என்று மக்கள் கலாச்சாரம் போதித்தால் என்ன ஆகிவிடப்போகிறது? இதனால் என்ன? வளர்ச்சி என்ற இந்த வாய்ப்பாடு அத்தகைய பண்பாட்டுத் தெரிவுக்கான இடத்தை அனுமதிக்குமா?

தற்போது ஆதிக்கம் செலுத்தும் புதிய தாராளமய பொருளாதாரப் பள்ளிகள் ஓதும் சந்தைத் தீர்வுகள் உட்பட, அரசு தலையீடு கோரிய பொருளாதார வளர்ச்சி சொல்லாடல்கள் ஆகிய இரண்டுமே சேமநலம், திறன் வளர்ப்பு அல்லது வேலைவாய்ப்புகள் ஆகியவை ஏதோ ஏழைகளுக்கு மட்டுமே தேவைப்படுவதாக சித்தரிப்பது ஏன்? ஏழைகளுக்கு அல்லாமல் வளர்ச்சி ஓதும் குருமார்கள் மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஓதும் தூதர்களுக்குத்தான் இத்தகைய உதவிகள் தேவைப்படுவதாக மாற்றிச் சிந்தித்தால் என்ன?



தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் வெளியான கட்டுரை. தமிழில்: ஆர்.முத்துக்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x