

வரும் மக்களவைத் தேர்தலின்போது மத்திய அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தரப்பில் ரூ.30,000 கோடி வரை செலவிடப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
2012-ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ரூ.42,000 கோடி செலவிடப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக இந்திய தேர்தலில் பெரும் தொகை செலவிடப் படுவதாக ‘சென்டர் பார் மீடியா ஸ்டடீஸ்’ என்ற அமைப்பின் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
கோடீஸ்வர வேட்பாளர்கள், கார்ப்ப ரேட் நிறுவனங்கள் சார்பில் கணக்கில் வராமல் கோடிக்கணக்கான ரூபாய் பிரச்சாரத்துக்காக வாரியிறைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி ஒட்டுமொத்தமாக ரூ.30,000 கோடி செலவிடப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்குப் பதிவு நடவடிக்கைகளுக்காக ரூ.3,500 கோடி வரை செலவு செய்யப்படும் என்று தெரிகிறது. இதே தொகை அளவுக்கு மத்திய அரசு, ரயில்வே துறை மற்றும் மாநில அரசுகளும் செலவு செய்யும்.
வேட்பாளர் செலவு வரம்பு உயர்வு
வரும் மக்களவைத் தேர்தலில் வேட்பாளர் செலவு வரம்பு ரூ.54 லட்சத்தில் இருந்து ரூ.70 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேட்பாளர்களின் தேர்தல் செலவு மட்டும் ரூ.4000 கோடியை எட்டும் என்று கூறப்படுகிறது.
சில வேட்பாளர்கள் கட்சிகளைவிட அதிக செலவு செய்வதாக ‘சென்டர் பார் மீடியா ஸ்டடீஸ்’ அமைப்பின் தலைவர் பாஸ்கர ராவ் கூறுகிறார்.
கடந்த 1996 மக்களவைத் தேர்தலி ன்போது ரூ.2500 கோடி செலவிடப்பட்டது. 2004-ம் ஆண்டில் இந்தத் தொகை ரூ.10,000 கோடியாக அதிகரித்தது. இது படிப்படியாக அதிகரித்து தற்போது ரூ.30,000 கோடி அளவை எட்ட உள்ளது.
நிலக்கரி, சிமென்ட் உள்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமான வேட்பாளர்களுக்காக கோடிக்கணக்கில் கருப்புப் பணத்தை வாரியிறைக்கின்றன. அவை கணக்கில் வருவதில்லை என்று அந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.
1952-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது அரசு சார்பில் ரூ.10.45 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது அரசு தரப்பு செலவு ரூ.846.67 கோடியாக அதிகரித்தது. வரும் மக்களவைத் தேர்தலின்போது அரசு தரப்பு செலவு ரூ.6000 கோடி முதல் ரூ.7000 கோடி வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம், வாக்குச் சீட்டு விநியோகம், வாக்களித்ததை உறுதி செய்யும் ஒப்புகை சீட்டு திட்டம் உள்ளிட்ட காரணங்களால் அரசு தரப்பு செலவு கணிசமாக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக ரூ.30,000 கோடி செலவிடப்படுவதாக கணக்கிட்டால் ஒவ்வொரு இந்திய வாக்காளருக்காகவும் ரூ.400 முதல் ரூ.500 வரை செலவிடப்படுகிறது என்று ‘சென்டர் பார் மீடியா ஸ்டடீஸ்’ அமைப்பு கணித்துள்ளது.