Last Updated : 22 May, 2014 12:15 PM

 

Published : 22 May 2014 12:15 PM
Last Updated : 22 May 2014 12:15 PM

தாவூத் இப்ராஹிமை பிடிப்பாரா மோடி?

புதிய பிரதமராக பதவி ஏற்கும் மோடியால், பாகிஸ்தானில் ஒளிந்திருக்கும் மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிமைப் பிடிக்க முடியுமா என கேள்வி எழுந்துள்ளது.

மும்பை நிழல் உலக தாதா எனப்படும் தாவூத் இப்ராஹிம் மீது மும்பையில் 1993-ல் நடந்த குண்டுவெடிப்பு உட்பட பல வழக்குகள் உள்ளன. இதனால், இந்தியாவிலிருந்து தப்பி ஓடிய தாவூத் பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளார். கடந்த இரண்டு முறை தொடர்ந்து மத்தியில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் இவரை இந்தியாவுக்குக் கொண்டுவர முடியவில்லை.

இது குறித்து நரேந்திர மோடி, தன் தேர்தல் பிரச்சாரத்தின் போது, “தாவூதைப் பிடிப்பதில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே மற்றும் பிரதமர் மன் மோகன் சிங் ஆகியோர் சுணக்கம் காட்டுவதாக” குற்றம்சாட்டினார்.

இப்போது, மோடி பிரதமராகும் நிலையில் அவர், தாவூதை பிடித்து விடுவாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:

பாகிஸ்தானின் அபட்டாபாத் தில் இருந்த அல்காய்தா தீவிர வாதி பின்லேடனை அமெரிக்கா தன் சிறப்புப்படையை அனுப்பி வளைத்தது போல், அங்குள்ள தாவூதையும் பிடிக்க வாய்ப்புகள் உள்ளன. இதுபோல், தாவூதை பிடிப்பதற்கான வழிகளை தேடும் முயற்சியில் பல முக்கிய அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இதை அறிந்த தாவூதும் அவரது சகாக்களும் கராச்சியில் இருந்து ஆப்கானிஸ்தான்-பாகிஸ் தான் எல்லைக்கு இடம் பெயர்ந்து விட்டதாகத் தகவல் கிடைத் துள்ளது. தாவூதைப் பிடிக்கும் முயற்சி வெற்றி பெறுவது, அமெரிக்காவிற்கு கிடைத்த அனுமதி பாகிஸ்தானிடமிருந்து இந்தியாவுக்குக் கிடைப்பதைப் பொருத்து உள்ளது.

இதற்காக சர்வதேச உதவியை மோடி நாடுவதற்கு வாய்ப்புள்ளது. கடந்த 15 வருடங்களாக சர்வ தேசக் குற்றவாளியாக தாவூத் கருதப்படுவதும் இதற்கு உதவியாக இருக்கும், என அவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான அஜீத்குமார் டோவலை அழைத்து மோடி பேசியுள்ளார். கேரள மாநிலப்பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அஜீத்குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் மத்திய உளவுத்துறையின் இயக் குநராக இருந்தார். இவரை, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்க, மோடி ஆலோசனை செய்து வருவதாகக் கூறப்படு கிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதி காரியான ஒய்.சி.பவார் கூறுகை யில், ‘தாவூதை பிடித்து இந்தியா விற்கு இழுத்து வருவது மோடிக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது. அதற்கு அவரிடம் பல்வேறு வழிகள் உள்ளன’ என்றார்.

சிவசேனையின் தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான சாம் னாவில், ‘தாவூதுடன் சேர்த்து மும்பை தாக்குதலுக்குக் காரண மான தீவிரவாதி ஹாபிஸ் சையீதையும் பிடித்து வந்து கண்டிப்பாக மோடி தூக்கிலிடுவார்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

தேர்தல் முடிவுகளுக்கு பின் மும்பையிலிருந்து தாவூதின் ஆட்களும் வளைகுடா நாடுகளுக்கு தப்பி செல்லத் தொடங்கி விட்டனர்.

தாவூதின் தொழில் விரோதி யான சோட்டா ராஜனுக்கு பயப்படுவதால் மலேஷியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு தாவூதின் ஆதரவாளர்கள் செல்ல வில்லை. வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியா, இந்தியாவின் நட்பு நாடு என்பதால் அதுதவிர மற்ற நாடுகளுக்கு தப்பிச் செல்வதாகவும் தெரிய வந்துள்ளது.

தாவூதை பிடிப்பதில், எதிர்க் கட்சிகளுடன் சேர்த்து தன் கூட்டணிக்கட்சிகளுக்கும் மோடி பதில் சொல்ல வேண்டி இருப்பதால், அவர் இதற்கு ஒரு முடிவு கட்டு வார் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x