

அரசியல் காரணமாக பிஹார் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாநில வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்களை துவக்கிவைத்தார்.
அப்போது பேசிய அவர் பிஹார் மாநிலத்துக்கு ஏற்கெனவே தான் அறிவித்த ரூ.50,000 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டங்களை அறிவிக்க தயாராக இருப்பதாகக் கூறினார். சரியான காலம் கனியும்போது அந்த வளர்ச்சித் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றார்.
இந்த விழாவில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
லாலு பிரசாத் யாதவ் மீது நரேந்திர மோடி குற்றச்சாட்டு வைக்கும் போது, “ஆட்சி மாறிய போது, இங்கிருந்து வந்த ரயில்வே அமைச்சர் வேலைகளை நிறுத்தி விட்டார். நாங்கள் ஆட்சிக்கு வந்து அந்த பணியை மீண்டும் தொடங்கினோம். அரசியல் செய்ய விரும்புபவர்கள் செய்யட்டும். ஆனால் பாதிக்கப்படுவதென்னவோ பிஹார் மக்கள்தான்” என்றார்.
பிஹாருக்காக சிறப்பு நிதி ஒதுக்கீடாக ரூ.50,000 கோடி அளிக்கும் உத்தரவாதம் குறித்து மோடி குறிப்பிட்ட போது, "சரியான தருணத்தில் பிஹார் மக்களின் தேவைகளை நிறைவேற்ற நான் வாக்குறுதி அளித்ததற்கும் மேலாகக் கூட வழங்குவேன்.
வளமான பிஹார் என்ற எங்கள் கனவைப் பார்க்கும் போது, ரூ.50,000 கோடிக்கும் அதிகம் கொடுப்போம். இது எனது வாக்குறுதி. நாட்டின் கிழக்குப் பகுதிகள முன்னேறினால்தான் நாடு முன்னேறும். பிஹாரை முன்னேற்றுவது எங்களது பிரதான திட்டம். கிழக்கு இந்தியாவின் வளர்ச்சியே எங்கள் பணித்திட்டம்.”
என்றார் மோடி.