

ஊழல் விவகாரங்களை முன்வைத்து எதிர்கட்சிகளின் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை திங்கள்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கியது முதல் எதிர்கட்சிகளின் அமளியால் முற்றிலுமாக முடங்கியது.
இந்த நிலையில், வார விடுமுறை தினத்தை அடுத்து இன்று கூட்டத் தொடரின் 5-வது நாள் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது.
மாநிலங்களவை கூடியதும் பிரதமர் மோடி அரசை விமர்சித்து காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூச்சலில் ஈடுபட்டனர்.
இதனால் மாநிலங்களவை இன்று ஒருநாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையிலும் கேள்வி நேரத்தை முடக்கிய எதிர்கட்சிகள், பாஜக-வை சேர்ந்த அமைச்சர்கள் சுஷ்மா, பங்கஜா முண்டே, முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள், நிலச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினர்.
சபாநாயகர் முன்பு பிரதமர் மோடி அரசுக்கு எதிராக பதாகைகளுடன் வந்து உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால், இன்று மதியம் வரை அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.