பிஹார் தேர்தலில் மகள், 2 மகன்களை களமிறக்கும் லாலு: ஒருவருக்கு துணை முதல்வர் பதவி பெற்றுத்தர திட்டம்

பிஹார் தேர்தலில் மகள், 2 மகன்களை களமிறக்கும் லாலு: ஒருவருக்கு துணை முதல்வர் பதவி பெற்றுத்தர திட்டம்
Updated on
2 min read

சில மாதங்களில் வரவிருக்கும் பிஹார் சட்டப்பேரவை தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனது மகள் மற்றும் 2 மகன்களை நிறுத்த திட்டமிட்டுள்ளார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு இவர்களில் ஒருவரை துணை முதல்வராக்குவதே அவரது நோக்கம் எனக் கூறப்படுகிறது.

லாலு, பிஹார் முதல்வராக இருந்த போது, கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் சிக்கியதால் கடந்த 1997-ம் ஆண்டு தனது பதவியை இழந்தார்.

இதில் ஒரு வழக்கில் ஜார்க்கண்ட் நீதிமன்றம் இவரை குற்றவாளி என தீர்ப்பளித்து, 5 ஆண்டுகள் தண்டனை அறிவித்ததால் லாலு எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், கடந்த மக்களவை தேர்தலில் தம் மூத்த மகளான மிசா பாரதியை பாடலிபுத்ரா தொகுதியில் நிறுத்தினார். ஆனால் இங்கு பாஜக சார்பில் போட்டியிட்ட லாலுவின் முன்னாள் சகாவான ராம்கிருபால் யாதவிடம் மிசா தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் மிசா பாரதியை தற்போது பாடலிபுத்ரா சட்டப்பேரவை தொகுதியில் நிறுத்த முடிவு செய்துள்ளார் லாலு. மேலும் மிசா பாரதியுடன் முதன் முறையாக தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், இளைய மகன் தேஜஸ்வீ யாதவ் ஆகியோரையும் போட்டியிட வைக்கத் திட்டமிட்டுள்ளார் லாலு.

கடந்த சனிக்கிழமை, ஹாஜிபூரின் மஹுவா தொகுதியில் நடந்த கட்சிக் கூட்டத்தில் மூத்த மகன் தேஜ் பிரதாப்பை வேட்பாளராக அறிமுகப்படுத்த முயன்றார் லாலு. ஆனால், ஜகேஷ்வர் ராய் என்பவர் இங்கு போட்டியிட விரும்பி ஏற்கெனவே பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.

இந்நிலையில் மேடையில் ஏறிய ஜகேஷ்வர் ராய், தேஜ் பிரதாப்பிடம் இருந்து ‘மைக்’கை பிடுங்கியதுடன், “உங்கள் தந்தை கட்சியின் தலைவ ராக இருக்கிறார் என்பதால், யாரை வேண்டுமானாலும் போட்டியிட வைப் பாரா?’ எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் சொல்ல முடியாமலும், ஜகேஷ்வரின் ஆதரவாளர்கள் கிளப்பிய எதிர்ப்பை சமாளிக்க முடியா மலும் லாலு திணறினார். இதனால் அவரால் தனது மகனை வேட்பாளராக அறிவிக்க முடியாமல் போனது.

இத்தொகுதிக்கு அருகில் இருக்கும் ரகோபூரில் தனது இளைய மகன் தேஜஸ்வியை நிறுத்த லாலு திட்டமிட்டுள்ளார். இவ்விரண்டு தொகுதிகளும் கொண்ட ஹாஜிபூர் மக்களவை தொகுதியில் யாதவர் வாக்குகள் அதிகம் என்பதே இதற்கு காரணம்.

கால்நடை தீவன வழக்கில் லாலு முதன் முறையாக சிறை சென்றபோது அவரது மனைவி ராப்ரி தேவி திடீர் முதல்வர் ஆனார்.

தொடர்ந்து மூன்று முறை சப்ராவின் ராகோபூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த ராப்ரிக்கு கடந்த முறை தோல்வி ஏற்பட்டது. பிறகு மக்களவை தேர்தலில் சாரண் தொகுதியில் போட்டியிட்ட இவர், பாஜக சார்பில் போட்டியிட்ட, தற்போதைய மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடியிடம் தோல்வி அடைந்தார்.

தொடர்ந்து 2 முறை தோல்வியை சந்தித்ததால், வரும் சட்டப்பேரவை தேர்தலில் ராப்ரி போட்டியிட மாட்டார் எனக் கூறப்படுகிறது.

லாலுவால் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனதும் அவரது கட்சி எம்.பி.யும் கிரிமினல் அரசியல்வாதிகள் பட்டியலில் இருப்பவருமான பப்பு யாதவ் என்கிற ராஜேஷ் ரஞ்சன் யாதவ், தன்னை லாலுவின் அரசியல் வாரிசு என அறிவித்தார்.

இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த லாலு, ரத்த சம்பந்தம் கொண்ட பிள்ளைகள் மட்டுமே ஒருவரது வாரிசாக முடியும் என பதிலளித்தார். இதைத் தொடர்ந்து கிளம்பிய பல்வேறு சர்ச்சைகளால் பப்பு தற்போது கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பிஹார் தேர்தலில் லாலு இம்முறை தனது மூன்று பிள்ளைகளை நிறுத்துவதற்கு, வெற்றி கிடைத்தால் அதில் ஒருவரை துணை முதல்வராக்கும் திட்டமே காரணமாகக் கூறப்படுகிறது.

பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து லாலு போட்டியிடுகிறார். இக்கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது கட்சிக்கு இணையான தொகுதிகளில் வெற்றியை லாலு எதிர்பார்க்கிறார்.

இதற்கு முன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த நிதிஷ் குமார், துணை முதல்வர் பதவியை கடந்த 2 முறையும் பாஜகவுக்கு கொடுத்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in