

மும்பை வெடிகுண்டு வழக்கில் குற்றவாளியான யாகூப் மேமன் நேற்று காலை நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார். இதனால் தீவிரவாத அமைப்பினர் நாசவேலையில் ஈடுபடக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் நகரில் சட்ட மன்றம், ஆந்திரா, தெலங்கானா தலைமை செயலகங்கள், இரு முதல்வர்களின் வீடுகள், ராஜ்பவன், முக்கிய அரசியல்வாதிகளின் வீடுகள், சார்மினார் உள்ளிட்ட பல இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பதி நகரிலும், திருமலையிலும் ஆயுதம் தாங்கிய போலீஸார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். திருப்பதியில் உள்ள ரயில், பஸ் நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. திருமலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. திருமலையிலும் தேவஸ்தான கண்காணிப்பு போலீஸார், ஆயுதப்படை போலீஸார் மற்றும் சிறப்பு ஆக்டோபஸ் கமாண்டோக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.