

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் திமுக தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், ஆர்.கே.அகர்வால் அடங்கிய அமர்வு வரும் 27-ம் தேதி விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் விடுதலைக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள மேல்முறை யீட்டு மனு குறித்து அறிவித்துள்ள உச்ச நீதிமன்றம், “சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப் பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவுடன் திமுக தரப்பின் மனுக்களும் இணைக் கப்படுகின்றன.
இந்த மனுக்கள் வருகிற 27-ம் தேதி நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், ஆர்.கே. அகர்வால் அடங்கிய அமர்வு முன்னிலையில் நீதிமன்ற அறை எண் 12-ல், 27-வது வழக்காக விசாரிக்கப்பட இருக்கிறது''என அறிவித்துள்ளது.
வழக்கு விசாரணையின்போது கர்நாடக அரசு தரப்பில் வழக் கறிஞர்கள் பி.வி. ஆச்சார்யா, எஸ். ஜோசப் அரிஸ்டாட்டில், சந்தேஷ் சவுட்டா ஆகியோரும், திமுக தரப்பில் வழக்கறிஞர்கள் அந்தி அர்ஜூனா, வி.ஜி. பிரகாசம் ஆகியோரும், ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர்கள் ஃபாலி எஸ்.நரிமன், கே.டி.எஸ்.துளசி உள்ளிட்டோரும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சிறப்பு அதிகாரி குணசீலனும் ஆஜராவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, திமுக தரப்பு 6 தனியார் நிறுவனங்களுக்கு எதிராக தொடுத்துள்ள மனுவுக்கு வலு சேர்க்கும் வகையில், சுமார் 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் ஆவணங்களை அன்பழகனின் வழக்கறிஞர் வி.ஜி. பிரகாசம் நேற்று தாக்கல் செய்தார்.