

நிலம் கையகப்படுத்தும் திருத்த மசோதா தொடர்பாக கட்சிகளிடம் ஒருமித்த கருத்து எட்டப்படும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சவுத்ரி வீரேந்திர சிங், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அப்போதைய காங்கிரஸ் அரசு நிலம் கையகப்படுத்தும் மசோதாவை அவசர கதியில் நிறைவேற்றியது. தற்போது அதில் தகுந்த திருத்தங்கள் மேற்கொண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மசோதாவை காங்கிரஸ் எதிர்க்கிறது. தற்போது எஸ்.எஸ். அலுவாலியா தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனையில் மசோதா உள்ளது. அந்தக் குழுவில் ஒருமித்த கருத்து எட்டப்படும் என்று நம்புகிறோம்.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவை மையமாகக் கொண்டு மாநில அரசுகள் தங்களின் நலனுக்கு ஏற்ப புதிய மசோதாவை இயற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. எனவே பெரும்பாலான மாநில கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் என்று நம்புகிறோம்.
நாடாளுமன்ற கூட்டுக் குழு வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்கும் என்று தெரிகிறது. அதன் அடிப்படையில் தற்போதைய மழைக்கால கூட்டத் தொடரில் மசோதா நிறைவேற்றப்படுமா அல்லது தள்ளிப்போகுமா என்பது தெரியவரும்.
காங்கிரஸ் ஆட்சியில் நிலம் கையகப்படுத்தும் மசோதா நிறை வேற்றப்பட்டது. அப்போது காங்கிரஸ் ஆண்ட மகாராஷ்டிரா, கேரளா, ஹரியாணா மாநில அரசுகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வலியுறுத்தின. அதை அன்றைய மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. ஆனால் இப்போது பாஜக அரசு ஆட்சியில் உள்ளதால் நில மசோதாவில் திருத்தம் மேற்கொள்ள காங்கிரஸ் எதிர்க்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.