Published : 04 Jul 2015 08:42 AM
Last Updated : 04 Jul 2015 08:42 AM

இந்தியாவில் இருந்து அவசரமாக எப்படி வெளியேற்றப்பட்டேன்..

கடந்த ஆண்டு 8.11.2014 வெள்ளிக் கிழமையன்று பெங்களூருவில் இருக்கும் என் வீட்டிலிருந்து நண்பருடன் புறப்பட்டேன். 3 போலீஸ் அதிகாரி கள் என்னை அணுகினர். “எங்களுடன் காவல் நிலையத்துக்கு வரவேண்டும்” என்று மூவரும் கூறினர். வெளிநாட்டவர் பிராந்திய பதிவு அலுவலகத்தில் என் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருப்ப தாகவும் என்னை அழைத்து வருமாறு பணிக்கப்பட்டதாகவும் அவர்களில் ஒருவர் கூறினார்.

உரிய காரணமோ, கைது ஆணையோ இல்லாமல் உங்களுடன் வரமாட்டேன் என்றேன். இந்தப் பதிலையடுத்து ஒருவர் தனது மேலதிகாரியுடன் கன்னடத்தில் வேகமாகப் பேசினார். அதே செல்போனை என்னிடம் தந்து பேசுமாறு கூறினார். அந்த அதிகாரி கூறியதையே செல்போனின் மறுமுனையில் இருந்த அதிகாரியும் கூறினார்.

அதற்கு நான் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர். பெங்களூருவில் 3 ஆண்டுகளாக வசிக்கிறேன். ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா அமைப்புக்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். என்னுடைய அலுவலகத்தாருடன் பேசிவிட்டு திங்கள்கிழமை உங்களைச் சந்திக்கிறேன் என்றேன். அது அவர்களைச் சமாதானப்படுத்தியிருக்க வேண்டும்.

சிறிது நேரம் கழித்து ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா அமைப்பின் துணை இயக்குநர் சசிகுமார் வேலத் என்னிடம் பேசினார்.

உள்துறை அமைச்சகத்திடம் பேசியதாகவும் விசா விதிகளை மீறியதாக என் மீதுள்ள குற்றச்சாட்டுகளின் பட்டியலைத் தரத்தான் கூப்பிடுகிறார்கள் என்றும் தெரிவித்தார். அவர்கள் அச்சுறுத்துவார்கள், தைரியமாக இருங்கள் என்றார். “ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மீறல் குறித்து 2 ஆண்டுகளாகப் பகிரங்கமாகத்தான் ஆய்வு செய்து வருகிறேன் என்று கூறுங்கள், இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் என்றுகூட அவர்கள் உங்களுக்கு நோட்டீஸ் அளிப்பார்கள்”, அஞ்ச வேண்டாம் இது வெறும் மிரட்டல்தான் என்றார்.

ஆம்னஸ்டி அமைப்புக்காக 2012 முதலே பெங்களூருவில் ஆய்வாளராக வும் பரப்புரையாளராகவும் பணியாற்றி வருகிறேன். இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் (பி.ஐ.ஓ.) என்பதற்கான அடையாள அட்டை வைத்திருக்கிறேன். அதே சமயம் பி.ஐ.ஓ.க்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. விசா இல்லாமல் இந்தியாவில் வேலைசெய்யவும் வாழவும் எனக்கு 15 ஆண்டுகளுக்கு அனுமதி தரப்பட்டிருந்தது. 30.10.2014 அன்று வெளிநாடு வாழ் இந்தியர் அட்டையும், இந்திய வம்சாவழியினர் என்பதற்கான அட்டையும் ஒன்று சேர்க்கப்பட்டது. ஒரு வருடைய பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி இந்தியாவிலிருந்து வெளியேறிய வர்கள் என்றால் அவர்களுடைய சந்ததியினர் விசா ஏதும் இல்லாமல் வாழ்நாள் முழுக்க இந்தியாவிலேயே தாராளமாக வேலை செய்யவும் தங்கியிருக்கவும் இது அனுமதிக்கிறது. வெளிநாடுகளில் வசிக்கும் இரண்டாவது, மூன்றாவது தலைமுறை இந்தியர்கள் இந்தியாவில் நீண்ட நாள் தங்கவும் வேலை செய்யவும் இதனால் முடிகிறது. ஆனால் சுற்றுச்சூழல் விவகாரங்களிலும் மனித உரிமைகள் குழுக்களிலும் வேலை செய்கிறவர்களுக்குத்தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அளிக்கும் உரிமைகளை ராணுவத்தினர் தவறாகப் பயன்படுத்துவது குறித்த அறிக்கையை 2014-ல் பதிப்பிக்க இருந்தேன். ராணுவத்திலும் துணை நிலை ராணுவப்படையிலும் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் எவ்வளவோ இருக்க அதில் கவனம் செலுத்தாமல், ராணுவம் மற்றும் துணை நிலை ராணுவப் படைகளின் மாண்பைக் குலைக்கும் விதத்தில் யார் மூலமும் எந்த அறிக்கையும் வெளியாகிவிடக்கூடாது என்பதில் மட்டுமே அரசு கவனமாக இருக்கிறது. பாதுகாப்புப் படையினரின் செயல்களைக் கேள்வி கேட்கும் அனைவருமே ‘தேச விரோதிகள்’ என்று முத்திரை குத்தப்படுகின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் நான் மேற்கொண்ட பணிகள் அதிகாரிகளுக்குத் தர்மசங்கடத்தையே அளித்தது. இதற்கிடையில் “ஜம்மு-காஷ்மீரில் நீங்கள் மேற்கொண்டுவரும் ஆய்வை இந்திய அரசு இனியும் சகித்துக்கொள்ளாது” என்று ‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா’வின் தலைமை நிர்வாகி அனந்த் குருசாமி 2014 அக்டோபரில் என்னை அழைத்துக் கூறினார். எதிர்காலத்தில் அந்த அமைப்பில் என்னுடைய பணி என்னவாக இருக்கும் என்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

வெளியேறுமாறு நோட்டீஸ்

சொன்னபடியே அடுத்த திங்கள்கிழமை வெளிநாட்டவர் பிராந்திய பதிவு அலுவலகத்துக்குச் சென்றேன். எங்களுடைய இந்திய ஆம்னஸ்டி அமைப்பின் செயல்பாட்டு இயக்குநர் மோகன் முண்ட்கர் உடன் வந்தார். அவரை வெளியே இருக்கச் சொல்லிவிட்டு என்னை மட்டும் ஒரு அறைக்குள் அனுமதித்தனர். அங்கே ஒரு பெண் அதிகாரி உட்பட 3 பேர் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தனர். அவர்களுடைய பெயர்களையோ பதவி நிலைகளையோ கூறிக்கொள்ளவில்லை. என்னுடைய ‘வெளிநாடு வாழ் இந்தியர்’ (ஓ.சி.ஐ.) அட்டையைப் பார்க்க விரும்புவதாக அந்த இளம் பெண் அதிகாரி கூறினார். அதை நான் கொடுத்தேன். இன்னொரு அதிகாரி, ‘இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்’ என்று குறிப்பிட்டிருந்த நோட்டீஸை அளித்தார். உடனே வெளியேற வேண்டும் என்றனர். காரணம் கூறப்பட்டிருக்கிறதா என்று பார்த்தேன், நோட்டீஸில் ஏதும் இல்லை. மேல் முறையீட்டுக்கும் அதில் வழியில்லை. காரணத்தைக் கேட்டேன். எங்களுக்கும் தெரியாது, மேலிடத்து உத்தரவுப்படி நடக்கிறோம் என்றனர். முடிந்தால் 24 மணி நேரத்துக்குள் வெளியேறுங்கள் என்றார் ஒருவர். உங்களுடைய ஆய்வு தொடர்பாக பிரச்சினைகள் இருந்திருக்கலாம், அமெரிக்கா திரும்பிய பிறகு சரி செய்துகொள்ளலாம் என்றனர்.

எனக்குள் அச்சம் ஏற்பட்டாலும் புன்னகை புரிந்தேன். இங்கே 4 ஆண்டு களாக இருக்கிறேன். எனக்கு வேலை, வீடு, நட்புவட்டம் எல்லாம் இங்கே இருக் கின்றன. நான் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவள். 24 மணி நேரத்துக்குள் என்னால் வெளியேற முடியாது என்றேன். அவர்கள் அனுதாபமாகப் பேசினார்கள். நாங்கள் செய்வதற்கு ஏதுமில்லை, மேலும் சில நாட்களுக்கு அவகாசம் பெறலாம் என்றனர்.

புறப்படுவதற்கு முன்னால், இந்திய வம்சாவழி என்பதற்கான அடையாள அட்டையை அந்தப் பெண் அதிகாரியிடம் கேட்டேன். “அது ரத்து செய்யப்பட்டு விட்டது, அதை நான் வைத்திருக்க வேண்டும். நீங்கள் இனி இந்திய வம்சாவழி குடிமகள் கிடையாது; நீங்கள் இங்கே தொடர்ந்து தங்க எந்த சட்டப்பூர்வ உரிமையும் கிடையாது” என்றார்.

என்னுடைய ஆய்வுக்காகவே நான் வெளியேற்றப்படும் வாய்ப்பு அதிகமாகி வருவதை உணர்ந்தேன். பிற்பகலில் வேலத் மீண்டும் தொடர்பு கொண்டார். “நீங்கள் அவகாசம் கோரியபடி 10 நாட்களுக்குள் வெளியேறத் தயாராகுங்கள், இது தான் நமக்குள்ள முதல் வழி” என்றார். உங்களை மன்னித்து அனுமதிப்பார்கள் என்று நினைத்தேன், இனி அப்படி நடக்காது. மற்றவர்களை எச்சரிக்க உங்களை இப்படி நடத்துகிறார்கள் என்றார்.

குடியேற்றத் துறை நிபந்தனை

2012 பிப்ரவரியில் ஆம்னஸ்டி என்னை ஆய்வுப் பிரிவில் சேர்க்க விரும்பிய போதே, இந்திய குடியேற்றத்துறையின் இணைய தளத்தைப் படித்துப் பார்த் தோம். இந்திய வம்சாவழியினரோ, இந்தியக் குடிமகனாக இருந்து வெளிநாடு சென்றவரோ இந்திய அரசிடம் முன் அனுமதி பெறாமல் ஆய்விலோ, மலையேற்றத்திலோ, மத இயக்கங்களிலோ ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனை அதில் இருந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஆய்வில் ஈடுபடுவதால் வெளியேற்றப் படும் வாய்ப்பு இருப்பதை ஏற்கெனவே விவாதங்கள் மூலம் தெரிந்து வைத்திருந்தோம்.

நூற்றுக்கணக்கானவர்கள் இந்திய வம்சாவழியினர் அல்லது இந்தியாவில் பிறந்து வெளிநாடுகளில் குடியேறியவர் என்ற அடையாள அட்டைகளோடு பத்திரிகையாளர்களாகவும் வளர்ச்சி திட்ட அலுவலர்களாகவும் ஆய்வாளர் களாகவும் இந்தியாவில் எந்தவிதப் பிரச்சினையுமின்றி பணியாற்றி வருகிறார்கள். காங்கிரஸ் தலைமையி லான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது என்றே ‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா’ அமைப்பு கருதியது. மனித உரிமைகள் தொடர்பாக ஆய்வு செய்யப் போகிறோம் என்று நாமாகவே தெரிவித்தால்தான் பிரச்சினை என்று கருதி அனுமதி வாங்காமல் விட்டுவிட்டோம். அப்போது எனக்கு வயது 23. நியூயார்க் பல்கலைக்கழகத்தில் இதழியலில் பட்டம் பெற்றிருந்தேன். லத்தீன் அமெரிக்க நாடுகளில் மனித உரிமைகள் மீறல் பற்றி அறிக்கை தயாரித்திருந்தேன். ஆம்னஸ்டி அமைப்பு என்னை வேலைக்கு அமர்த்தியபோது உற்சாகம் அடைந்து, அதிகக் கேள்விகள் கேட்காமல் பணியை ஒப்புக்கொண்டேன்.

ஆய்வுக்காக மனுச் செய்யும் இந்திய வம்சாவழியினருக்கும் இந்தியாவில் பிறந்த வெளிநாட்டவருக்கும் கூட நிபந் தனைகளுக்குப் பிறகே ஆய்வுகளுக்கு அனுமதி தரப்படுகிறது.

அத்துடன் ஆய்வுக்கு ஏற்பாடு செய்யும் அமைப்பு களின் பின்புலமும் இந்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளால் ஆராயப்படு கிறது. ஆனால் இவை எதுவும் வழிகாட்டு நெறிகளில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. என்னுடைய இந்திய வம்சாவழியினர் என்ற அடையாளத்தை ரத்துசெய்து, வெளியேற்றியதைப் போல இதற்கு முன் நடந்ததில்லை என்று அறிகிறேன்.

சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் என்னிடம் பேசுகையில், மீண்டும் நான் இந்தியாவுக்குத் திரும்ப இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிவித்தனர். 22.11.2014-ல் இந்தியாவை விட்டு நான் புறப்பட்டேன். இந்தியாவை விட்டு வெளியேறி 6 மாதங்களாகிறது. இதை நான் பகிரங்கமாக யாருக்கும் தெரி விக்கவில்லை. இதை எதிர்த்து நீதிமன்றத் தில் வழக்கு தொடுக்க வேண்டும் என்று இதுவரையில் நான் நினைக்கவில்லை. பேசினால் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்ப வாய்ப்பே இருக்காதா, என்னை ஆய்வுக்கு அனுப்பிய அமைப்புக்கு குறி வைக்கப்படுமா என்றெல்லாம் சிந்தித்துப் பேசாமலிருந்துவிட்டேன்.

என்னை வெளியேற்றிய 6 மாதங் களுக்குப் பிறகு நரேந்திர மோடி அரசு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வாயை அடைக்கப் பார்க்கிறது. அரசின் செயலை விமர்சித்தால் எதிர்காலத்தில் செயல்படவே முடியாதோ என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பே அஞ்சுகிறது. இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ரிச்சர்ட் வர்மாவும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஆர்வலர்களும் ஒடுக்கப்படுவது குறித்துக் கவலை தெரிவித்துள்ளார். நான் இதுவரை அமைதி காத்திருந்தும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப் படையின ரின் மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கையை வெளியிட்டுவிட்டது. எனவே இப்போது நானும் வாய் திறக்க வேண்டியதாயிற்று.

இந்தியா எந்த ஒரு விஷயத்தையும் விவாதித்து, அறிவுப்பூர்வமாக அணுக வேண்டும். பன்முகத்தன்மை கொண்டி ருக்க வேண்டும். தன்னுடைய தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். தங்களுடைய பணிகளுக்காக சிறைவாசம், சித்திரவதை அனுபவித்தவர்கள் அனேகம். தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறவர்களை ஒடுக்க அரசு கையாண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல்கள் எழுப்பப்படும் என்று நம்புகிறேன். குறிப்பிட்டுச் சொல்லும்படியான குற்றச் செயல் எதிலும் ஈடுபடவில்லை என்றாலும் தனிநபர்கள் மீது குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டால் உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்குக் குறைவு ஏற்பட்டுவிடும் என்பதை இந்தியா உணர வேண்டும்.

(ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா என்ற அமைப்பின் ஆய்வாளர் கிறிஸ்டினா மேத்தா.)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x