

கோதாவரி புஷ்கரம் நிகழ்ச்சியின் 2-ம் நாளான நேற்று லட்ச கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, ஆந்திரா, தெலங்கானாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரியில் நேற்று வழக்கம் போல் பக்தர்கள் புனித நீராடினர். நேற்று முன்தினம் இப்பகுதியில் கோட்டம் மகும்மம் பகுதியில் பக்தர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதில், நெரிசலில் சிக்கி 29 பேர் பலியாயினர். இதனை தொடர்ந்து கோதாவரி புஷ்கரத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டது. கோனசீமா, அந்தர்வேதி, யானாம், குண்டலேஸ்வரம் ஆகிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. ரயில், பஸ், கார், ஜீப் என பல்வேறு வாகனங்கள் மூலம் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.
அமைச்சர் நாராயணா, கட்டுப்பாட்டு அறையில் இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
நேற்று முன்தினத்தை விட நேற்று 31 சதவீதம் அதிகமாக பக்தர்கள் வந்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். அமாவாசை என்பதால், நேற்று ஏராளமான பக்தர்கள் கோதாவரி புஷ்கரத்துக்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, புனித நீராடினர்.