

லலித் மோடி விஷயத்தில் சுஷ்மா ஸ்வராஜ் எந்த தவறும் செய்ய வில்லை. எனவே அவர் ராஜினாமா செய்ய மாட்டார். அதேபோல் முதல்வர்கள் வசுந்தரா, சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள் என்று பாஜக மேலிடம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
ஐபிஎல் ஊழலில் சிக்கிய லலித் மோடிக்கு உதவிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, வியாபம் ஊழல் விவகாரத்தில் சிக்கிய மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்றுமுன்தினம் தொடங்கியது. அப்போது, சுஷ்மா உட்பட 3 பேரும் ராஜினாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில் எம்.பி.க்கள் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, “லலித் மோடி விஷயத்தில் சுஷ்மா எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே, அவர் ராஜினாமா செய்ய வேண்டியதில்லை” என்று எம்.பி.க்கள் கூறினர். இதேபோல், வசுந்தரா, சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோரும் ராஜினாமா செய்ய தேவையில்லை என்று கூட்டத்தில் ஆதரவு தெரிவித்தனர்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது:
45 நிமிடம் நடந்த இந்தக் கூட்டத்தில் சுஷ்மா பேசும்போது, “லலித் மோடிக்கு எந்த உதவியையும் நான் செய்யவில்லை. அவருக்கு பயண ஆவணங்கள் வழங்கும் விஷயத்தில் எந்த முடிவு எடுத்தாலும், அது இந்திய - இங்கிலாந்து உறவை பாதிக்காது என்றுதான் பிரிட்டன் அதிகாரிகளிடம் கூறினேன்’’ என்று மீண்டும் தெளிவுப்படுத்தினார். லலித் மோடிக்கு பண உதவியோ அல்லது பயண ஆவணங்கள் கொடுக்கும்படியோ சொல்லவில்லை என்று சுஷ்மா தெரிவித்தார்.
சிறிய விஷயத்தை மலையாக்க பார்க்கிறது காங்கிரஸ். இங்கு சிறு விஷயம் என்றுகூட எதுவும் இல்லை. லலித் மோடி விஷயத்தில் சுஷ்மா, வசுந்தரா ஆகியோர் எந்தத் தவறும் செய்யவில்லை. உண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர்தான், நிலக்கரி ஊழலில் தொடர்புடைய சந்தோஷ் பக்ரோடியாவுக்கு தூதரக பாஸ்போர்ட் வழங்க சுஷ்மாவுக்கு நிர்பந்தம் அளித்துள்ளனர். இதை சுஷ்மாவே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நக்வி தெரிவித்தார்.
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறும்போது, “பாஜக ஆளும் மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. நேர்மையான முறையில் மாநிலங்களில் ஆட்சி நடக்கிறது. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை” என்று தெரிவித்தார். “மத்திய அரசின் செயல்பாடுகளால் பாஜக எம்.பி.க்கள் பெருமைப்பட வேண்டும்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்தில், ‘வியாபம்: கட்டுக்கதைகளும் - உண்மைகளும்’, ‘காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் ஊழல்’ என்ற 2 சிறு நூல்கள் பாஜக எம்.பி.க்களுக்கு விநியோகிக்கப்பட்டன.