

இலங்கையில் நடைபெற்ற இரு நாடுகளிடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் எட்டப்படாததால் தமிழக மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்திய-இலங்கை இருநாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் கொழும்பில் உள்ள ஹேரிதாஸ் அரங்கத்தில் இரண்டாம்கட்டப் பேச்சுவார்த்தை தமிழக-இலங்கை மீனவப் பிரதிநிதிகள், இரு நாட்டு உயர் அதிகாரிகள் முன்னிலையில் திங்கள்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கியது.
இந்தப் பேச்சுவார்த்தையில், பாக்ஜலசந்தி கடற்பரப்பில் இருநாட்டு மீனவர்களும் பாரபட்ச மின்றி மீன்பிடித்தல், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதல்கள், சிறைப்பிடிப்பு, படகுகள் பறிமுதல் செய்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
பேச்சுவார்த்தையின்போது தடை செய்யப்பட்ட இழுவலைகளைப் பயன்படுத்த மாட்டோம் என தமிழக மீனவர்கள் ஒப்புக்கொண்டனர். எனினும் இதர விஷயங்களில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை எந்தவித தீர்வும் இன்றி முடிவடைந்தது. இனி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து இந்தியத் தரப்பில்தான் தெரிவிக்க வேண்டும் என இலங்கை மீனவர்கள் தெரிவித்ததாக பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தமிழக மீனவர்கள் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக தமிழக-இலங்கை மீனவப் பிரதிநிதிகள் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: இரண்டாம்கட்ட கொழும்புப் பேச்சுவார்த்தை சுமுக உடன்பாட்டை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
சென்னை மற்றும் கொழும்பு என இரண்டு கட்டப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் தீர்மானங்களை நிறைவேற்றி அதனை இருநாட்டு அரசுகளின் பார்வைக்கு அனுப்பி, பின்னர் அதனை இருநாட்டு அரசுகள் ஒப்புதல் அளித்த பிறகு, பேச்சுவார்த்தையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றனர்.