சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு கட்டணமில்லா சிகிச்சை திட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு கட்டணமில்லா சிகிச்சை திட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு
Updated on
1 min read

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்று வானொலி உரையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

மெலும், "சாலை விபத்துகளில் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில், சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா விரைவில் கொண்டுவரப்படும்" என்றார் அவர்.

'மான் கி பாத்' (மனதின் குரல்) என்ற தலைப்பில் மாதந்தோறும் வானொலியில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் உரை நிகழ்த்துகிறார். இந்த மாதத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரை நிகழ்த்திய மோடி கூறியது:

"சாலை விபத்துகளில் உயிரிழப்பு அதிகமாகி வருவது கவலை அளிக்கிறது. டெல்லியில் ஸ்கூட்டரில் சென்ற ஒருவர் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி இருக்கிறார். அவருக்கு உதவி செய்ய யாரும் வரவில்லை. சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நான் வானொலியில் பேச வேண்டும் என்று பலர் என்னிடம் தெரிவித்தனர்.

இந்தியாவில் ஏற்படும் விபத்துகளை பற்றிய புள்ளிவிவரங்களை பார்க்கும்போது, ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒரு விபத்து நடக்கிறது. நான்கு நிமிடத்துக்கு ஒருவர் விபத்தில் இறக்கிறார் என்று தெரிய வருகிறது. அவர்களில் மூன்றில் 2 பங்கினர் 15 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது வேதனை அளிக்கிறது.

இந்த நிலையை தடுக்க வேண்டும். அதற்காக சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பான புது மசோதா விரைவில் கொண்டு வரப்படும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டவுடன் அடிபட்டவருக்கு சிகிச்சை அளிக்க முதலில் யார் பணம் செலுத்துவது என்று கவலைப்பட தேவையில்லை. விபத்து நடந்த நிமிடத்தில் இருந்து 50 மணி நேரத்துக்கு பாதிக்கப்பட்டவர் கவலைப்பட தேவை இருக்காது. கட்டணமில்லா சிகிச்சைக்கு வழிவகை செய்யப்படும். இதற்கான திட்டமும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். முதற்கட்டமாக குர்கான், ஜெய்ப்பூர், வதோதரா, மும்பை, ராஞ்சி, ரன்கோன், மவுரியா போன்ற தேசிய நெடுஞ்சாலைகளில் அறிமுகப்படுத்தப்படும்.

மேலும், தேசிய சாலை பாதுகாப்பு கொள்கை மற்றும் சாலை பாதுகாப்பு செயல் திட்டம் ஆகியவற்றை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது" என்றார் பிரதமர் மோடி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in