

பிரதமர் மோடியைச் சந்தித்த போது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசாத தால் அதிருப்தியடைந் துள்ள காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சயீத் அலி ஷா கிலானி, பாகிஸ்தான் தூதரகம் அளிக்க வுள்ள ஈத் மிலான் விருந்தை புறக் கணிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் கிலானி இது தொடர்பாக கூறியதாவது:
ரஷ்யாவில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜம்மு-காஷ்மீரின் ஒரு கோடி மக்கள் குறித்து பேசாமல் இரு பிரதமர்களும் அலட்சியப்படுத்திவிட்டனர்.
எனவே, பாகிஸ்தானின் எந்தவொரு கொண்டாட்டத்திலும் பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளோம். காஷ்மீர் பிரச்சினை என்பது எங்களுக்கு வாழ்வா சாவா பிரச்சினை.
எனது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் புதுடெல்லியில் வரும் 21-ம் தேதி நடக்கவுள்ள ஈத் மிலான் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை. ரஷ்ய சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசாதது துரதிருஷ்டவசமானது.
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரதான பிரச்சினை காஷ்மீர். இப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக அவர்கள் பேசவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.