

ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரது கருணை மனுக்கள் 11 ஆண்டுகளாக குடியரசுத் தலைவரிடம் கிடப்பில் இருந்ததால், தண்டனையை குறைக்க வேண்டும் என்று அவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி, அவர்களது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ராஜீவ் கொலை வழக்கில் உயிரிழந்தோரின் குடும்பங்களின் கருத்தையும் கேட்க வேண்டும். அவர்களது நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று வாதிடப்பட்டது. இந்த வாதம் அப்போதே நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பாக நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘கருணை மனு மீது 11 ஆண்டுகள் முடிவெடுக்காமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது அசாதாரண தாமதம் தான். அதைக் காரணமாக வைத்து, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது சரியானது தான்’ என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
7 பேர் விடுதலை மனு
இவர்கள் மூன்று பேர் உள்ளிட்ட ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேரை தமிழக அரசு விடுதலை செய்ததை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தின் வேறு அரசியல் சாசன அமர்வு முன்பாக விசாரணையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.