

சிறையில் 14 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை மாநில அரசுகள் விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுளாகக் குறைத்தது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432 மற்றும் 433-ம் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளது. இந்தப் பிரிவுகளை பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், 432, 433 சட்டப் பிரிவுகளில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்ய தடை விதித்தது.
இந்த தடை உத்தரவு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பினாகி சந்திர கோஷ், அபய் மனோகர் சாப்ரே, யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 2014 ஜூலை 9-ம் தேதி வெளியிட்ட தடை உத்தரவில் சில மாற்றங்கள் செய்து புதிய உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர்.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: சிறையில் 14 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் தண்டனை அனுபவித்த கைதிகளை மாநில அரசுகள் விடுதலை செய்யலாம். ஆனால் கொலை, பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை.
ஆயுள் முழுவதுக்கும் ஆயுள் தண்டனை என்று தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளிகளை மாநில அரசுகள் விடுதலை செய்ய முடியாது. குறைந்தது 20 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று தண்டனை காலம் நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாகவும் மாநில அரசுகள் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.
சிபிஐ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் விசா ரணை செய்த வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளையும் விடுதலை செய்யக் கூடாது. அதன்படி தடா பிரிவில் தண்டனை பெற்ற குற்றவாளி களுக்கு மாநில அரசுகள் மன்னிப்பு வழங்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜீவ் வழக்கில் பொருந்தாது
கடந்த 2014 ஜூலை 9-ம் தேதி பிறப்பித்த தடை உத்தரவில் செய்யப்பட்ட இந்த மாற்றங்கள் ராஜீவ் கொலை வழக்கு குற்ற வாளிகளுக்கு பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரின் விடுதலை தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெறும்.