Last Updated : 22 Jul, 2015 09:22 AM

 

Published : 22 Jul 2015 09:22 AM
Last Updated : 22 Jul 2015 09:22 AM

2016 தேர்தல்: பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு மம்தா சவால்

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஓரணியில் திரண்டாலும் நாங்கள் தனித்து நின்று வெற்றி பெறுவோம் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கூறினார்.

1993-ம் ஆண்டு போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 தொண்டர்கள் கொல்லப்பட்ட தினத்தை தியாகிகள் தினமாக திரிணமூல் காங்கிரஸ் கடைபிடித்து வருகிறது. இதையொட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மம்தா பேசியதாவது:

இதற்கு முன் எங்கள் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக இருந்தது. இப்போது மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக போராடி வருகிறோம். மேற்கு வங்கத்தில் மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதியை நரேந்திர மோடி அரசு குறைத்துள்ளது. இதற்கு எதிராக எங்கள் போராட்டம் தொடரும். இப்போராட்டத்தை மேற்கு வங்கத்தில் இருந்து டெல்லி வரை மிகப்பெரும் இயக்கமாக மாற்றுவோம்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு போரிடும் வல்லமை உள்ளது. மத்திய அரசு மற்றும் அதன் அமைப்புகளை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்கள் சாவதற்கும் தயராக உள்ளோம். ஆனால் மத்தியில் ஆளும் கட்சிக்கு தலைவணங்க மாட்டோம்.

ஊழல் மற்றும் மதவாதத்தில் தொடர்புள்ளவர்கள் எங்களுக்கு ஊழல் பற்றி பாடம் நடத்தக் கூடாது. மேற்கு வங்கத்தில் மதவாத விஷயத்தை பரப்புவோருக்கு திரிணமூல் காங்கிரஸ் தகுந்த பதிலடி கொடுக்கும்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்துக்கு மத்திய அரசு வெறும் ரூ.100 கோடி மட்டுமே கொடுத்துள்ளது. இதில் ரூ.50 கோடி விளம்பரத்துக்கு செலவிடப்பட்டுள்ளது. எஞ்சிய ரூ.50 கோடியில் என்ன செய்ய முடியும்?

சிறுமிகளுக்கான மேற்கு வங்க அரசின் கன்னியாஸ்திரி திட்டம் உலகின் முன்னோடி திட்டமாக உள்ளது. லட்சக்கணக்கான சிறுமிகள் பலன் அடைந்துள்ள இத்திட்டத்துக்கு இதுவரை ரூ.1,000 கோடி செலவிடப்பட்டுள்ளது.

பாஜக, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடம் கொள்கைகளும் இல்லை, தார்மீக நெறிகளும் இல்லை. மேற்கு வங்கத்துக்கு இவை பொருத்தமற்றவை. எங்களுக்கு எதிராக புரளி கிளப்புவது மட்டுமே இக்கட்சிகளின் பணியாக உள்ளது. இக்கட்சிகளுக்கு மேற்கு வங்கத்தில் இடமில்லை.

தனித்து நின்று வெற்றி

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தலில் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங் கிரஸ் ஆகிய கட்சிகள் ஓரணியில் திரண்டாலும் நாங்கள் தனித்து நின்று வெற்றி பெறுவோம்.

தேர்தல் வெற்றிக்கு பின் இதைவிட மிகப்பெரிய பொதுக் கூட்டம் நடத்தி சாதனை படைப்போம். இவ்வாறு மம்தா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x