

“நிலம் கையகப்படுத்தும் மசோதா வுக்கு அரசியல் காரணங்களுக்காக முட்டுக்கட்டை போடாதீர்கள். அதனால் கிராமப்புற வளர்ச்சி கடுமையாக பாதிக்கும்” என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.
நிதி ஆயோக் அமைப்பின் 2-வது கூட்டம் டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இதில் அவர் பேசிய தாவது:
நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு அரசியல் காரணங் களுக்காக முட்டுக்கட்டை போட வேண்டாம். இந்த மசோதா நிறைவேறாவிட்டால் கிராமப்புற வளர்ச்சி கடுமையாகப் பாதிக் கப்படும். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த மசோதா விஷயத்தில் எல்லா மாநில அரசுகளும் மத்திய அரசும் ஒற்றுமையாக இருந்து வறுமை ஒழிப்புக்கு பாடுபட வேண்டும்.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு அரசியல் கட்சி கள் எதிர்ப்பு தெரிவிப்பது, கிராமப்புற வளர்ச்சியை பெரிதும் பாதித்துள்ளது. கிராமப்புறங்களில் புதிதாக பள்ளிகள், மருத்துவ மனைகள், சாலைகள், நீர்ப் பாசன திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியவில்லை. நிலம் கையகப்படுத்தும்போது விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பதில் மத்திய - மாநில அரசுகளுக்குள் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் விஷயத்திலும் கிராமப்புற மேம்பாட்டு விஷயத்திலும் அரசியல் நுழைந்துவிடக் கூடாது.
இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வில் உள்ளது. மாநில அரசுகள் தெரி வித்த யோசனைகளை நாடாளு மன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள இந்த நேரத்தில் மறுபடியும் பரிசீலிப்பது சரியாக இருக்கும்.
இவ்வாறு மோடி பேசினார்.
அருண் ஜெட்லி கண்டனம்
நிலம் கையகப்படுத்தும் மசோதாவை 30 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வு செய்து வருகிறது. இந்தக் குழு, அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரிடமும் இதுகுறித்து கருத்து கேட்டறிந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இக்குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந் நிலையில், வரும் 21-ம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக நிலம் கையகப்படுத்தும் மசோதா விஷயத்தில் அரசியல் கட்சிகளிடம் ஒருமித்த கருத்தை உருவாக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.