

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில், பஸ் மற்றும் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு எஸ்பி உட்பட 5 காவலர்கள், 3 பொதுமக்கள் என 8 பேர் பலியாயினர். தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் 10 மணி நேர துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு சுட்டுக் கொன்றனர்.
தீவிரவாதிகள், ரயில்வே பாதையை தகர்க்க வைத்திருந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. இந்த தீவிரவாத தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியதை அடுத்து, பாகிஸ் தான் எல்லையில் இந்திய ராணுவம் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
தீவிரவாத தாக்குதல் சம்பவம் குறித்து உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோ ருடன் ஆலோசனை நடத்தி னார்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம், ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நேற்று அதிகாலை 5 மணிக்கு, ராணுவ உடை யணிந்து கனரக ஆயுதங்கள் வைத்தி ருந்த தீவிரவாதிகள் சாலையோர உணவுக் கடை மீது தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த கமல்ஜீத் மதாரு என்பவரை சுட்டுவிட்டு, அவரிடமிருந்து வெள்ளை நிற மாருதி காரை கைப்பற்றினர். பின்னர் அங்கிருந்து தினாநகர் காவல் நிலையம் நோக்கிச் சென்றனர். வழியில் சாலையோர வியாபாரி ஒருவரைச் சுட்டுக் கொன் றனர். பின்னர், அவ்வழியாகச் சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 4 பயணிகள் பலத்த காயமடைந்தனர். தொடர்ந்து, தினாநகர் காவல் நிலையத்துக்கு அருகே இருந்த சமுதாய மருத்துவமனை மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இத்தாக்குதல்களில் 3 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல்களுக்குப் பிறகு தினாநகர் காவல்நிலையத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த இரு காவலர்களைச் சுட்டுக் கொன்றனர். காவல்நிலையத்துக்கு அருகே இருந்த காவலர் குடியிருப்பு மீதும் துப்பாக் கிச் சூடு நடத்தினர். பின் காவல்நிலை யத்துக்கு அருகில் காலியாக இருந்த கட்டிடத்துக்குள் புகுந்துகொண்டனர்.
அதற்குள் தீவிரவாத தாக்குதல்கள் குறித்து தகவல் அறிந்த, பாதுகாப்புப் படையினர் உஷார் படுத்தப்பட்டனர். பதான்கோட்டிலிருந்து வந்த ராணுவத்தினரும், ஸ்வாட் படையினரும் சம்பவ இடத்தைச் சுற்றி வளைத்தனர். பஞ்சாப் காவல்துறையினரும் தீவிரவாதிகள் நுழைந்த கட்டிடத்தைச் சுற்றி வளைத்தனர்.
வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
இதனிடையே நகரம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது, பதான்கோட்-குர்தாஸ்பூர் ரயில்பாதையில் 5 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டன.
10 மணி நேர துப்பாக்கிச் சூடு
தீவிரவாதிகள் பதுங்கியிருந்த கட்டிடத்துக்குள் பிணையக் கைதி களைப் பிடித்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், பாதுகாப்புப் படையினர் உடனடி நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை.
தீவிரவாதிகள் அவ்வப்போது, திடீர் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும், பஞ்சாப் காவல் துறை யினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருதரப்பு மோதலில், புலனாய்வு அதிகாரியும் காவல்துறை கண்காணிப்பாளருமான (எஸ்பி) பல்ஜித் சிங், 2 ஊர்க்காவல்படை வீரர்கள் பலியாயினர்.
மேலும் சில காவலர்கள் காயமடைந்தனர். பாதுகாப் புப் படையினரின் பதிலடியில் முதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். பின்னர் மாலை 5.30 மணியளவில் 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப் பட்டது உறுதி செய்யப்பட்டது.
தீவிரவாத தாக்குதல்களில் காவல் துறையினர் பொதுமக்கள் என 8 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். 7 பேரும் அமிருதசரஸ் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி களிடமிருந்து 2 ஜிபிஎஸ் கருவிகள், துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த தீவிரவாதிகள் பாகிஸ்தான் எல்லையிலிருந்து ஊடுருவியிருப்பதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.