Published : 03 Mar 2014 09:20 AM
Last Updated : 03 Mar 2014 09:20 AM

மதச்சார்பின்மை பெயரில் மக்களை தவறாக வழிநடத்துகிறது காங்கிரஸ்: மோடி குற்றச்சாட்டு

மதச்சார்பின்மை என்ற பெயரில் காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்தி வருகின்றன என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேசம் லக்னோவில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மக்களவைத் தேர்தல் சூட்டை இப்போதே உணரத் தொடங்கிவிட்டோம். நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுவதையும் காணமுடிகிறது.

காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளைப் பொறுத்தவரை மதச்சார்பின்மை என்பது வாக்குவங்கி அரசியல். மதச்சார் பின்மையை அவர்கள் ஆட்சியைப் பறிக்கும் தேர்தல் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்தி வருகின்றன. பாஜகவைப் பொறுத்தவரை மக்களை ஒருங்கிணைப்பது, வளர்ச்சியை உறுதி செய்வது ஆகியவற்றுக்கு மட்டுமே மதச்சார்பின்மையை பயன்படுத்துகிறோம்.

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி அரசு, இந்த மாநிலத்தில் ஏன் அதிக கலவரங்கள் நடைபெறுகின்றன என்பதை விளக்க வேண்டும். முதல்வர் அகிலேஷ் யாதவின் ஓராண்டு ஆட்சியில் 150 கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. ஆளும் கட்சித் தலைவர்கள் மீது 45 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண் களுக்கு எதிரான குற்றங்களில் 20 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு சிறிய கலவரம்கூட ஏற்படவில்லை. ஒரு இடத்தில்கூட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.

வளர்ச்சிப் பணிகளைப் பொறுத்தவரை குஜராத்தையும் உத்தரப் பிரதேசத்தையும் ஒப்பிடவே முடியாது. குஜராத்தில் ஆண்டு முழுவதும் 24 மணி நேர மின்சார விநியோகம் உள்ளது. அதற்கு நேர்மாறாக உத்தரப் பிரதேசம் மின் பற்றாக்குறையால் இருளில் தவிக்கிறது என்றார்.

மோடி சிறப்புப் பேட்டி

இந்தி நாளிதழ் ஒன்றுக்கு மோடி அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது:

திடமான முடிவெடுக்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அதுதான் நாட்டுக்கு நல்லது. அந்த அரசால்தான் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியும். இந்த நிலையில் இப்போது 3-வது அணி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டுக்கு பாதிப்புதான் ஏற்படும்.

3-வது அணித் தலைவர்கள் காங்கிரஸை எதிர்ப்பதாக கூறி வருகின்றனர். ஆனால் அவர்கள் சந்தர்ப்பவாதிகள். பல்வேறு தருணங்களில் அவர்கள் காங்கிரஸோடு கைகோத்துள்ளனர்.

நாடு முழுவதும் காங்கிரஸுக்கு எதிரான அலை வீசுகிறது. அந்தக் கட்சி மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். இப்போது 3-வது அணி அமைத்திருப்பது மறைமுகமாக காங்கிரஸுக்கு உதவுவதாக மட்டுமே அமையும்.

ஆட்சியாளர்களே ஊழல்வாதிகளாக உள்ளனர் அல்லது வாய்மூடி மவுனியாக இருந்து ஊழலுக்கு ஒப்புதல் அளிக்கின்றனர். மத்தியில் நம்பகமான ஊழல் அற்ற அரசு அமைந்தால் மட்டுமே ஊழலைக் கட்டுப்படுத்த முடியும் என்றார் நரேந்திர மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x