

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான குழு 5 நாள் பயணமாக பிரிட்டனுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றது.
நேற்று காலையில் லண்டன் புறப்படுவதற்கு முன்பு கொல்கத்தாவில் உள்ள என்எஸ்சி போஸ் சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மம்தா பானர்ஜி கூறும்போது, “மேற்குவங்கத்துக்கு வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கு இந்தப் பயணம் உதவும் என்று நம்புகிறோம். சுகாதாரம், கல்வி மற்றும் இதர சமூகநலத் துறை சார்ந்த பல்வேறு ஒப்பந்தங்கள் இந்தப் பயணத்தின்போது கையெழுத்தாகும்” என்றார்.
மேற்குவங்கத்தில் உள்ள தொழில் வாய்ப்பு தொடர்பாக, பிரிட்டன் இந்திய வர்த்தக கவுன்சில் மற்றும் பிக்கி ஆகிய அமைப்புகளின் சார்பில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மம்தா பங்கேற்க உள்ளார்.