

சத்தீஸ்கரில் பணிக்காக சென்று கொண்டிருந்த போலீஸார் மீது தாக்குதல் நடத்தி 4 அதிகாரிகளை மாவோயிஸ்ட்டுகள் கடத்தி சென்றுள்ளனர்.
சத்தீஸ்கரில் உள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்க மாநில காவல்துறையோடு மாவோயிஸ்ட் தடுப்பு படையினர் தீவிரமாக செயல்படுகின்றனர். இதனிடையே குத்ரூ பகுதியில் இருந்து பிஜாப்பூர் நோக்கி நேற்று (திங்கள்கிழமை) மாலை பாதுகாப்புப் பணிக்காக மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீஸார் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வனப்பகுதியின் நடுவே பேருந்து சென்றபோது திடீரென மாவோயிஸ்டுகள் வழிமறித்து 4 போலீஸார் மீது தாக்குதல் நடத்தி கடத்திச் சென்றனர். கடத்தப்பட்ட அனைவருமே புதிதாக பணியில் அமர்த்தப்பட்டவர்கள் ஆவர். இவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடத்தல் சம்பவத்தை மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு போலீஸ் துணை ஆணையர் தினேஷ் பிரதாப் உபாத்யாய் உறுதி செய்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, "பேருந்து ஓட்டுநர்கள் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம். மாவோயிஸ்டுகள் எங்களை தொடர்ந்து கண்காணித்து பேருந்து புறப்படுவதை குறி வைத்து தாக்குதல் நடத்துகின்றனர். இதில் நிச்சயம் ஓட்டுநர்களின் பங்கு இருக்கும் என சந்தேகிக்கிறோம்" என்றார்.