

*
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் உடல் குவாஹாட்டி விமான நிலையத்தில் இருந்து டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
கலாம் உடலை, முப்படை வீரர்களும் பெற்றுக் கொண்டனர். பின்னர் முப்படைத் தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், கலாம் உடலுக்கு மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அம்மாநில துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்க் கலாம் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி, கலாம் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
டெல்லி இல்லத்தில் அஞ்சலி:
கலாமின் உடல் டெல்லி பாலம் விமான நிலையத்திலிருந்து ராணுவ மரியாதையுடன் ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு அவரது உடலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி ஆகியோர் மரியாதை செலுத்தினர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலாம் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
கலாம் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாரடைப்பால் மரணம்:
குடியரசு முன்னாள் தலைவர் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (84) மாரடைப்பால் திங்கள் கிழமை மாலை உயிரிழந்தார்.
மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் திங்கள் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலாம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அங்கு நேற்று மாலை 6.30 மணி அளவில் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் உள்ள பெதானி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று (செவ்வாய்கிழமை) காலை சிறப்பு விமானம் மூலம் அசாம் தலைநகர் குவாஹாட்டியில் இருந்து டெல்லி கொண்டு செல்லப்பட்டது.
முன்னதாக, குவாஹாட்டி விமான நிலையத்தில், கலாம் உடலுக்கு அசாம் முதல்வர் தருண் கோகோய், அசாம் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர், இந்திய விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
கோகோய் கூறும்போது, "இது தேசத்துக்கு ஈடு செய்ய முடியாது இழப்பு. அவர் குழந்தைகளை நேசித்தார். இத்தேசத்தை நேசித்தார். கலாமை நான் நிறைய முறை சந்தித்திருக்கிறேன். அவரை அசாமின் கிராமப்புறங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன். அவர் மிகவும் எளிமையானவர். நேர்மையான மனிதர். அவரது மறைவுக்கு தேசமே கண்ணீர் சிந்துகிறது" என்றார்.
7 நாள் துக்கம்:
மத்திய அரசு சார்பில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இருப்பினும் விடுமுறை ஏதும் இல்லை என அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இன்று (செவ்வாய்கிழமை) இயங்கும். 7 நாட்களும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என மத்திய அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 30-ல் இறுதிச் சடங்கு:
நாளை மறுநாள் (ஜூலை 30-ம் தேதி) ராமேஸ்வரத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.