

பெண்களுக்கு எதிரான குற்றங்களை கையாள்வதற்காக, காவல்துறையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை சத்தீஸ்கர் அரசு வழங்க வேண்டும் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மகளிருக்கான ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ என்ற திட்டத்தை மேனகா காந்தி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் பங்கேற்றார்.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ஒன் ஸ்டாப் சென்டர் நாட்டில் முதன்முறையாக ராய்ப்பூரில் தொடங்கப்பட்டுள்ளது. துயரத்தில் உள்ள பெண்களுக்கு, மருத்துவம், காவல், சட்ட உதவி, உளவியல் ஆலோசனை, வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தற்காலிக சேவைகள் என அனைத்து விதமான உதவிகளும் இந்த அமைப்பால் வழங்கப்படும்.
திட்டத்தைத் தொடங்கி வைத்து மேனகா பேசியதாவது: தேசிய சராசரியை விட சத்தீஸ்கரில் பாலின விகிதம் அதிகமாக இருப்பது பாராட்டுக்குரியது. நடப்பாண்டுக்குள் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இம்மையம் தொடங்கப்படும். ரூ. 14 கோடி மதிப்பில் நாடு முழுவதும் 36 மையங்கள் திறக்கப்படும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாள காவல் துறையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை சத்தீஸ்கர் அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.