மகளிர் இடஒதுக்கீடு மசோதா விரைவில் சட்டமாகும்: ராகுல் காந்தி உறுதி

மகளிர் இடஒதுக்கீடு மசோதா விரைவில் சட்டமாகும்: ராகுல் காந்தி உறுதி
Updated on
1 min read

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உறுதி கூறினார்.

மக்களவை தேர்தலை யொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு முன் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு தரப்பினரையும் சந்தித்து உரையாடி வருகிறார்.

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மகளிர் காங்கிரஸ் சார்பில் திங்கள்கிழமை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுமார் 250 பெண்களுடன் ராகுல் கலந்துரையாடினார்.

அப்போது ராகுல் பேசியதாவது: நாட்டின் 50 சதவீத மக்களான பெண்களுக்கு அதிகாரம் அளிக்காவிடில் நம் நாடு வல்லரசாக முடியாது. பெண்கள் அதிகாரம் பெறச் செய்வது மிகப்பெரிய போராட்டம். இதில் வெற்றிபெற நாம் தொடர்ந்து போரிட வேண்டும். நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா விரைவில் நிறைவேற்றப்படுவதுடன், அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் காங்கிரஸ் அமைச்சர்களில் பாதி பேர் பெண்களாக இருப்பார்கள்.

நான் சிறுவனாக இருந்தபோது குடும்பத்தில் அப்பா ராஜீவ் காந்தி, சித்தப்பா சஞ்சய் காந்தி இருந்தாலும், பாட்டி இந்திரா காந்திதான் குடும்பத் தலைவராக இருந்தார்.

பெண்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை கொடுத்துவிட்டால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கத் தேவையில்லை. அவர்கள் தாங்களே தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள். நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை கைவிட மாட்டோம் என உறுதி அளிக்கிறேன். அரசியல் கட்சிகளும் இதில் தங்களுக்குரிய பொறுப்பை உணரவேண்டும்.

இந்த மசோதா நிறைவேற்றப்படாவிடில், அனைத்து துறைகளில் பெண்கள் அதிகாரம் பெறச் செய்வது இயலாத காரியம். ஒவ்வொரு பெண்ணும் நாட்டின் சொத்து என்றார் ராகுல்.

கூட்டத்தில், அங்கன்வாடிப் பணியாளர்கள், பாலியல் தொழிலாளிகள், திருநங்கைகள், நலிவுற்ற பெண்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in