

நாட்டை உலுக்கி வரும் மத்திய பிரதேச மாநிலத்தின் வியாபம் முறைகேடு தொடர்பாக சிபிஐ 3 புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளது.
2012-ம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்த மருத்துவ மாணவி நம்ரதா டேமர் வழக்கு உட்பட 3 புதிய வழக்குகளைப் பதிவு செய்துள்ளது சிபிஐ.
இதன் மூலம் இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ 8 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
மத்திய பிரதேச பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கமிஷன் உறுப்பினர் மற்றும் அவரது மகன் தொடர்பான வழக்கு உட்பட முன்னதாக 5 வழக்குகளை தொடுத்துள்ளது சிபிஐ.
ஆனால் மருத்துவ மாணவி விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை கொலை செய்யப்பட்டதாக அறிவுறுத்திய நிலையில், ம.பி.காவல்துறையோ அவர் மன அமைதி குலைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறிவருகிறது.
சட்டவிரோதமான முறையில் நம்ரதா மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்ததால் அவர் இதில் ஒரு முக்கிய சாட்சி. அதனால் அவரது மரணமும் கடும் சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில் சிபிஐ அதையும் புதிய வழக்கில் சேர்த்துள்ளது.
2010-ம் ஆண்டு மருத்துவ முன் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கில் ஒருவர் குற்றம்சாட்டப்பட்டவராகச் சேர்க்கப்பட்டது 2-வது வழக்காகும்.
3-வது வழக்கு 2010-ம் ஆண்டு வியாபம் நடத்திய தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பானது, இதில் 4 பேரை குற்றம்சாட்டியுள்ளது மத்திய பிரதேச போலீஸ். மேலும் இதில் 7 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக நிகழ்ந்த 5 மர்ம மரணங்கள் குறித்தும் சிபிஐ விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.