Last Updated : 10 Jul, 2015 09:17 AM

 

Published : 10 Jul 2015 09:17 AM
Last Updated : 10 Jul 2015 09:17 AM

தேர்வில் நடந்த முறைகேட்டை அம்பலப்படுத்தியதே நான்தான்: முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தகவல்

‘வியாபம்’ முறைகேட்டை ஊடகங்களோ, காங்கிரஸோ வெளிப்படுத்தவில்லை. அதனை அம்பலப்படுத்தியது நான்தான் என மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

‘வியாபம்’ முறைகேடு தொடர்பாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இரு நாட்கள் முன்பு வரை சிபிஐ விசாரணைக்கு மறுத்து வந்த சவுகான், உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் வியாபம் முறை கேடு தொடர்பாக அவர் கூறிய தாவது:

காங்கிரஸ் அல்லது ஊடகங்களால் வியாபம் முறைகேடு அம்பலமாகவில்லை. மருத்துவ நுழைத்தேர்வு சேர்க்கையில் முறைகேடு நடந்திருப்பதை நான் கண்டறிந்த பிறகே, இது வெளிச்சத்துக்கு வந்தது.

இவ்விவகாரத்தில் பாஜக எனக்கு பக்கபலமாக உள்ளது. பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் ஆர்எஸ்எஸ்ஸுக்கு என்மீது நம்பிக்கை உள்ளது. எதிர்க்கட்சியினர் பெரிய பின்புலம் கொண்டவர்கள், செல்வாக்கான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். அவர்களின் அரசியல் தோல்விக்கு பழிவாங்க நினைத்தால் என்னைப் பழிவாங்கட்டும். ஆனால், இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ள, வேளாண்மையில் நாட்டில் முதலிடத்தில் உள்ள மாநில அரசின் பெயரை ஏன் கெடுக்க வேண்டும்.

சிபிஐ விசாரணை கோருவதில் தாமதம் இல்லை. உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடைபெறுவதை எப்படி தாமதம் எனக் கூற முடியும். 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வியாபம் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து மரணங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படும். ஆளுநருக்கு முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது குறித்து நான் எதுவும் சொல்வதற்கில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x