

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ம் தேதி தீர்ப்பளித்தது.
மேலும் இந்த மூவரின் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில், இந்த மூவருடன் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏற்கெனவே ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 4 பேரையும் விடுதலை செய்வதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
தமிழக அரசின் இந்த முடிவுக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்த உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அதாவது ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்ததால், வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று வாதிட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கும் தொடர்ந்தது.
முக்கியமான இந்த வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று மத்திய அரசு தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தது. இதையடுத்து, 7 பேரின் விடுதலைக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
கடந்த ஓராண்டு காலத்துக்கும் மேலாக நிலுவையில் இருந்த இந்த வழக்கின் விசாரணை ஜூலை 15-ந் தேதி தொடங்கும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நீதிபதிகள் இப்ரா ஹிம் கலிபுல்லா, பி.சி. கோஸ், ஏ.எம். சப்ரே, யு.யு. லலித் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.