

அறக்கட்டளை தொடர்பான வழக்கில் சாதகமாக தீர்ப்பு வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றதாக கர்நாடக நீதிபதி சரணப்பா சஜ்ஜன் கைது செய்யப்பட்டார்.
பிதர் மாவட்டம், பசவகல்யாண் நகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக சரவணப்ப சஜ்ஜன் பணியாற்றி வந்தார். கடந்த 2014 டிசம்பர் 23-ம் தேதி அறக்கட்டளை தொடர்பான வழக்கில் ஒருதரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க கீர்த்திராஜ் போஸ்தே என்பவரிடம் இருந்து அவர் ரூ.1 லட்சத்தை லஞ்சமாக பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் கர்நாடக உயர் நீதிமன்ற ஊழல் தடுப்புப் பிரிவினர் நீதிபதி சரவணப்ப சஜ்ஜன் மற்றும் இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரியில் சரவணப்ப சஜ்ஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். போலீஸ் விசாரணையில் லஞ்ச புகாருக்கு வலுவான ஆதா ரங்கள் இருப்பது தெரியவந்ததால் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தானூர் நகரில் உள்ள வீட்டில் நேற்றுமுன் தினம் அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி நஞ்சுண்டையா முன்பு அவர் ஆஜர் செய்யப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.