Published : 26 May 2014 08:36 AM
Last Updated : 26 May 2014 08:36 AM

13 வயதில் எவரெஸ்டில் ஏறி ஆந்திர மாணவி சாதனை

உலகில் மிகக்குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர் என்ற உலக சாதனையை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது மாணவி படைத்துள்ளார்.

ஆந்திர மாநில சமூக நலத்துறை சார்பில் அரசு விடுதியில் தங்கி படிக்கும் 30 மாணவ, மாணவர்களுக்கு பிரான்ஸ் மலைப்பயிற்சி குழுவினர் பயிற்சி அளித்தனர். இதில், தெலங்கானா பகுதியில் உள்ள நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியான லட்சுமி தேவதாஸ் என்பவரது மகள் மாலாவத் பூர்ணா ஸ்வேரோஸ் (13) மற்றும் கம்மம் மாவட்டம் செர்ல மண்டலம் கலிவேரு கிராமத்தை சேர்ந்த ஆனந்த் (16) ஆகிய இருவரும் ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணியளவில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி நமது நாட்டின் தேசிய கொடியை பறக்க விட்டனர்.

மொத்தம் 52 நாட்கள் பயணம் செய்த இவர்கள், தேசிய கொடியுடன் அம்பேத்கர் மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.ஆர் சங்கரன் ஆகியோரது உருவப் படங்களையும் எவெரெஸ்ட் சிகரத்தின் மீது பதித்தனர்.

மாலாவத் பூர்ணா ஸ்வேரோஸ் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். ஒன்பதாம் வகுப்புப் படித்து வரும் இவர்தான் இதுவரை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர்களிலேயே மிகக் குறைந்த வயதுடைய (13 ஆண்டுகள் 11 மாதங்கள்) சிறுமியாவார். இன்டர் மீடியட்( பிளஸ் 1) படித்து வரும் மற்றொரு மாணவரான ஆனந்தின் தந்தை சைக்கிள் மெக்கானிக்காக உள்ளார். இந்த சிறு வயதிலேயே அரிய சாதனை புரிந்துள்ள இந்த இரு மாணவர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இம்மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொன்னாலா லட்சுமையா இருவருக்கும் தலா ரூ. 5 லட்சம் பரிசு அறிவித்துள்ளார்.

மேலும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x