Last Updated : 08 Jul, 2015 09:44 AM

 

Published : 08 Jul 2015 09:44 AM
Last Updated : 08 Jul 2015 09:44 AM

ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கட்சிகள்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அரசியல் கட்சிகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கொண்டுவர உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதுதொடர்பாக தன்னார்வத் தொண்டு நிறுவனமான ஜனநாயக மறுசீரமைப்பு சங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதிகள் அருண் குமார் மிஷ்ரா மற்றும் அமிதவா ராய் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 6 கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த மனுவில் கூறியிருப்ப தாவது:

தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் பொது அமைப்புகளாகவே கருதப்படுகின்றன. எனவே, அவை ஆர்டிஐ சட்ட வரம்புக்கு உட்பட்டு கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க உத்தரவிட வேண்டும்.

பெரு நிறுவனங்கள், அறக்கட் டளைகள் மற்றும் தனி நபர்களிட மிருந்து அரசியல் கட்சிகள் ஏராள மாக நன்கொடை பெறுகின்றன. ஆனால் இதுபற்றிய விவரங்களை முழுமையாக வெளியிடுவதில்லை.

ரூ.20 ஆயிரத்துக்கு கீழ் பெறப்படும் நன்கொடை பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என இப்போதுள்ள விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல.

நன்கொடை பெறப்படும் அனைத்து (எவ்வளவு தொகையாக இருந்தாலும்) தொகை பற்றிய விவரம், நன்கொடை வழங்கியவர் விவரம் மற்றும் வரவு-செலவு விவரம் ஆகியவற்றை கட்டாயமாக வெளியிடுமாறு தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதிடும்போது, “தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் பொது அமைப்புகளாகவே கருதப்படுகின்றன. எனவே, அவை ஆர்டிஐ சட்ட வரம்புக்கு உட்பட வேண்டும்” என்றார்.

இதுபோல, அரசியல் கட்சிகள் பொது அமைப்புதான் என்றும், ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு கட்சிகள் உரிய பதில் அளிக்க வேண்டும் என்றும் மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x