

அசாமில் பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த வீரர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில், சகவீரர் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தில் உள்ளது திஹூ நகரம். இதை சப் டிவிஷனாக பிரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்நிலையில், ‘திஹூ சப் டிவிஷன் கோரிக்கை குழு’ அமைப்பின் சார்பில், தேசிய நெடுஞ்சாலை -31-ல் நேற்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கு பாதுகாப்பு பணியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வீரர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென சக வீரர்கள் மீது சரமாரியாக சுடத் தொடங்கினார். சத்தம் கேட்டு சக வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்களும் பீதியில் சிதறி ஓடினர். அங்கு பதற்றம் ஏற்பட்டது. சிஆர்பிஎப் வீரர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், சக வீரர் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும், 10 பேர் குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து நல்பாரி துணை ஆணையர் ஓம் பிரகாஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘துப்பாக்கிச் சூடு நடத்திய வீரர் ஹவில்தார் அமல்குமார் தாஸ் என்று தெரிய வந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் துணை உதவி ஆய்வாளர் போர்டோலாய் மற்றும் மாணவன் ஹிமாங்ஷு தமுலி ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், சக வீரர்கள் 4 பேர், பொதுமக்கள் என 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஷாஹித் முகுந்தா கலிதா சிவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய அமல்குமார் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது’’ என்றார்.
துணை ஆணையர் மேலும் கூறும்போது, ‘‘சம்பவ இடத்தில் இருந்த கூடுதல் துணை ஆணையர் மிரிகேஷ் பரூவா துணிச்சலாக செயல்பட்டு, அமல்குமாரிடம் இருந்து துப்பாக்கியைப் பிடுங்கி அவரை கீழே தள்ளி உள்ளார். பரூவாவின் துணிச்சலால் பலருடைய உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன’’ என்றார்.
தகவல் அறிந்த அசாம் முதல்வர் தருண் கோகோய் கூறும்போது, ‘‘நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இந்த துப்பாக்கிச் சூடு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்படவில்லை. சக வீரர்கள் மீது நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மத்திய படை வீரர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளதையே காட்டுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் இப்போது அடிக்கடி நடக்கின்றன. இது ஒரு எச்சரிக்கைதான். எனவே, வீரர்களின் பணி மற்றும் வாழ்க்கை நிலையை மேம்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கிறேன்’’ என்றார்.